சனாதனம் பற்றிய கருத்துக்கு உதயநிதியை தண்டித்தே ஆகனும்.. காங்கிரஸ் முதல்வர் ரேவந்த் ரெட்டி ஆக்ரோஷம்
ஹைதராபாத்: டெங்கு, மலேரியா போன்று சனதானமும் ஒழிக்கப்பட வேண்டும் என்று பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அதோடு சனாதனம் குறித்த கருத்துக்காக உதயநிதி ஸ்டாலின் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும் எனக்கூறியுள்ளார்.
தெலுங்கானாவில் கடந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடந்தது. இதில் முன்னாள் முதல்வர் சந்திரசேகரராவின் பிஆர்எஸ் கட்சியை வீழ்த்தி காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்தது. இதையடுத்து முதல்வராக ரேவந்த் ரெட்டி பொறுப்பேற்று செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில் தான் ரேவந்த் ரெட்டி ‛டைம்ஸ் நவ் குரூப்' சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார். அப்போது அவரிடம், சனாதன தர்மம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது தொடர்பாக கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு ரேவந்த் ரெட்டி ‛‛உதயநிதி ஸ்டாலினின் கருத்து தவறானது; அது அவருடயை சிந்தனை, சனாதனம் குறித்த கருத்திற்காக அவர் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும்’’ என தெரிவித்துள்ளார். உதயநிதி ஸ்டாலினின் சனாதனம் குறித்த கருத்தை ‛இந்தியா’ கூட்டணி கட்சியினர் ஏற்றுக்கொள்ளவில்லை.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, காங்கிரஸ் கட்சி உதயநிதி ஸ்டாலினின் கருத்துக்கு உடன்படவில்லை என ஏற்கனவே தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தான் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியும் இப்படி கூறியுள்ளார். விரைவில் தெலுங்கானாவில் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ரேவந்த் ரெட்டி, உதயநிதி ஸ்டாலினின் சனாதனம் குறித்த பேச்சை கடுமையாக கண்டித்துள்ளார்.
முன்னதாக உதயநிதி ஸ்டாலின் இந்த சிக்கலில் மாட்டுவதற்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 2ம் தேதி தமிழக முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கம் சார்பில் சென்னையில் நடந்த சனாதன ஒழிப்பு மாநாடு தான் காரணம். இதில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று பேசினார். அப்போது, ‛‛சிலவற்றை நாம் ஒழிக்கத்தான் வேண்டும். எதிர்க்க முடியாது. கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது. ஒழித்துக்கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனம். அதேபோல் தான் சனாதனம்.’’ என்றார்.
உதயநிதி ஸ்டாலினின் இந்த பேச்சு தான் விவாதத்தை கிளப்பியது. உதயநிதியின் இந்த பேச்சுக்கு பாஜக தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர் மீது போலீஸ் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மேலும் உதயநிதிக்கு எதிராக பல மாநிலங்களில் உள்ள நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டன. மேலும் உச்சநீதிமன்றத்திலும் வழக்கு நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications