"ஆணாக மாறிய பெண் ஐஆர்எஸ் அதிகாரி".. சென்னையுடன் இப்படியொரு பந்தம்! யார் இவர்? வரலாற்றில் முதல் முறை
ஹைதராபாத்: தனது பெயரையும், பாலினத்தையும் மாற்றிக்கொள்ள விரும்பிய பெண் ஐஆர்எஸ் அதிகாரியின் கோரிக்கையை நிதியமைச்சகம் ஏற்றிருக்கிறது. நிதியமைச்சகத்தின் வரலாற்றில் இதற்கு முன்னர் இதுபோன்று நடந்தது இல்லை என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
ஹைதராபாத்தில் உள்ள சுங்க வரி மற்றும் சேவை வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் தலைமை ஆணையர் அலுவலகத்தில் இணை ஆணையராக பணியாற்றி வருபவர்தான் 35 வயதான எம் அனுசுயா. இவர் சமீபத்தில் தன்னுடைய பாலினத்தை ஆணாக மாற்றிக்கொண்டார். எனவே தான் பணியாற்றும் அலுவலகத்தில் அனைத்து ஆவணங்களிலும் தன்னுடைய பெயரை அனுகதிர் சூர்யா என மாற்ற வேண்டும் என்று நிதியமைச்சகத்திற்கு கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த கோரிக்கையை ஏற்றுள்ள நிதியமைச்சகம், இனி அவர் துறை சார்ந்த அனைத்து அலுவலக பதிவுகளிலும் அனுகதிர் சூர்யா என்றே அவர் அடையாளம் காணப்படுவார் என தெரிவித்திருக்கிறது. நிதியமைச்சகம் தனது ஊழியர் ஒருவரின் பெயரையும் பாலினத்தையும் அதிகாரப்பூர்வமாக மாற்றியிருப்பது இதுவே முதல் முறை என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
அனுகதிர் சூர்யா சென்னையில் உள்ள மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் பிரிவில் இளங்கலை பட்டப்படிப்பை முடித்திருக்கிறார். இதனை தொடர்ந்து 2023 இல் போபாலில் உள்ள தேசிய சட்ட நிறுவனம் பல்கலைக்கழகத்தில் சைபர் லா மற்றும் சைபர் தடயவியல் துறையில் பிஜி டிப்ளமோ முடித்திருக்கிறார்.

பின்னர் சென்னையில் உதவி ஆணையராக தனது வேலையை தொடங்கியிருக்கிறார். பணியில் இவருடைய திறமையை பார்த்து வியந்த அதிகாரிகள், இவரை துணை ஆணையராக பதவி உயர்த்தியுள்ளனர். இப்படியாக கடந்த ஆண்டு ஹைதராபாத்தில் பணியாற்ற தொடங்கினார்.
சர்வதேச அளவில் மாற்று பாலினத்தவர்கள் குறித்த கண்ணோட்டங்கள் வெவ்வேறாக இருக்கும் நிலையில், இந்திய அரசு பாலின மாற்றத்தை இயல்பாக எடுத்துக்கொண்டிருப்பதன் விளைவே, அனுசியாவுக்கு அனுகதிர் சூர்யாவாக கிடைத்த அங்கீகாரம் என பலர் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.
இன்றைக்கும் மேலை நாடுகளில் மாற்று பாலினத்தவர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. பெரு நாட்டு அரசாங்கம் ஒருபடி மேலே சென்று மாற்று பாலினத்தவர்களை மனநோயாளிகள் என்று அடையாளப்படுத்தியிருந்தது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியிருந்தது. இப்படி இருக்கையில், அரசு பெண்ணிலிருந்து ஆணாக மாறிய தனது ஊழயரை அங்கீகரித்திருப்பது வரவேற்கத்தக்கது என்றும் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன.












Click it and Unblock the Notifications