ரகசிய கேமரா.. பணம் பறிப்பு.. சாமி விபூதினு கூறி சயனைடு கலந்து காதலர் கொலை.. அதிர வைக்கும் சுஷ்மா!
ஹைதராபாத்: ஆந்திராவில் வசதி படைத்த ஆண்களை ஆசை வலையில் சிக்க வைத்து அந்தரங்க காட்சிகளை வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்த ஒரு பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் விசாரணையில் கைது செய்யப்பட்ட பெண் ஏற்கெனவே தனது காதலனுக்கு சயனைடு விஷம் கொடுத்து கொன்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது.
ஆந்திரா மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுஷ்மா. இவரது கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இறந்துவிட்டார். இந்த நிலையில் அழகு நிலையம் வைத்துள்ள இவர் வருமானம் இன்றி அவதிப்பட்டு வந்துள்ளார்.
இவரது அழகு நிலையத்தில் பணியாற்றுவோருக்கும் சம்பளம் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து குறுகிய வழியில் பணம் சம்பாதிப்பது எப்படி என யோசித்துள்ளார்.

வசதி படைத்த ஆண்கள்
இதையடுத்து தனது அழகு நிலையத்தில் பணியாற்றும் பெண்களிடம், வசதி படைத்த ஆண்களை தம் வலையில் சிக்க வைக்குமாறு மூளைச்சலவை செய்துள்ளார் சுஷ்மா. இதையடுத்து அவர்களும் வருமானத்திற்கு ஆசைப்பட்டு சுஷ்மா சொல்லியபடி பணக்காரர்களை குறிவைத்து அவர்களுக்கு வீடியோ கால் போட்டு சொகுசு பங்களாக்களுக்கு வரவழைத்துள்ளனர்.

ரகசிய கேமரா
அங்கு வரும் வசதி படைத்தவர்களை நிர்வாணப்படுத்தி அதை ரகசிய கேமரா மூலம் வீடியோ எடுத்து பின்னர் அந்த காட்சிகளை வைத்து மிரட்டி பணம் பறிப்பதையே இவர்கள் வாடிக்கையாக கொண்டதாக தெரிகிறது. இது போல் கடந்த 2ஆம் தேதி வேலூரைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை வரழைத்து நிர்வாணமாக்கி வீடியோ எடுத்து ரூ 25 லட்சம் கேட்டு மிரட்டியுள்ளனர்.

பணத்தையும் நகைகளையும்
அப்போது தனது கையில் இருந்த ஒன்றரை லட்சம் ரூபாய் பணத்தையும் அவர் அணிந்திருந்த நகைகளையும் கொடுத்துவிட்டு சென்றுள்ளார். ஆனால் சுஷ்மா கும்பலோ மீண்டும் மீண்டும் அவரிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளதாக தெரிகிறது. இதையடுத்து அந்த தொழிலதிபர் வேலூர் போலீஸில் புகார் அளித்துள்ளார். அந்த தொழிலதிபர் மூலம் பணம் தருவதாக கூறி சுஷ்மா மற்றும் அவருக்கு உதவிய கும்பலை வரவழைத்து சுஷ்மாவை போலீஸார் பிடித்தனர்.

8 செல்போன்கள்
அவர்களிடம் இருந்து 3 சவரன் தங்க நகை, 8 செல்போன்கள், 50 லட்ச ரூபாய், ஒரு கார் மற்றும் ரகசிய கேமரா, மெமரி கார்டுகளை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து சுஷ்மாவின் செல்போனை ஆய்வு செய்து போது அதில் ஒரு ஆணின் புகைப்படம் இருந்தது. விசாரணையில் அந்த நபர் கவுரி சசி என்பது தெரியவந்தது.

குண்டூரை சேர்ந்த ஆண்
சுஷ்மாவின் கணவர் இறந்த பிறகு, குண்டூரை சேர்ந்த கவுரி சசி என்பவர் பேஸ்புக் மூலம் அறிமுகமாகியுள்ளார். அவர் தொழிலதிபர்களை மிரட்டி சுஷ்மா பணம் பறிப்பதை அறிந்து கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த சுஷ்மா, ஒரு நாள் சாய்பாபா கோயில் பிரசாதம் என கூறி சயனைடு கலந்து ஒரு விபூதியை கொடுத்துள்ளார். இதை தூங்கச் செல்வதற்கு முன்பு தண்ணீரில் கலந்து குடிக்குமாறும் அறிவுறுத்தினார்.

சயனைடை விபூதியில் கலக்க சொன்ன சுஷ்மா
இவர் சொன்னது போல் கவுரி சசியும் இரவு படுக்க செல்வதற்கு முன்னர் சயனைடு விபூதியை தண்ணீரில் கலந்து குடித்துள்ளார். காலையில் அவர் உயிரிழந்து கிடந்துள்ளார். இவர் கொரோனாவால் இறந்திருக்கலாம் என நினைத்து போலீஸுக்கு தகவலும் தெரிவிக்காமல் பிரேத பரிசோதனைக்கும் அனுப்பாமல் உறவினர்களே அடக்கம் செய்து விட்டனர். இதையடுத்து இந்த மரணம் குறித்தும் சுஷ்மா கைது குறித்தும் குண்டூர் போலீஸாருக்கு தகவல் அளித்துள்ளனர். சுஷ்மாவுடன் அதே பகுதியைச் சேர்ந்த உமா மகேஷ்வர ராவ், குமார், நாகூர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.












Click it and Unblock the Notifications