"அந்த 5 விஷயம்.." தெலுங்கானாவில் காங்கிரஸ் இறக்கும் மெகா பிளான்.. கேசிஆர் கட்சிக்கு இது சிக்கல் தான்
ஹைதராபாத்: தெலுங்கானாவில் இந்தாண்டு இறுதியில் சட்டசபைத் தேர்தல் நடக்கும் நிலையில், இதை எதிர்கொள்ளக் காங்கிரஸ் மெகா பிளானை போட்டுள்ளது.
தெலுங்கானாவில் இப்போது கேசிஆர் தலைமையிலான பிஎஸ்ஆர் ஆட்சி நடந்து வருகிறது. அங்குக் கடந்த 10 ஆண்டுகளாகவே கேசிஆர் கட்சி மிகவும் வலுவாக இருக்கிறது. கடந்த தேர்தலில் அக்கட்சியை யாராலும் வீழ்த்த முடியவே இல்லை.

கடைசியாக அங்கே கடந்த 2018இல் சட்டசபைத் தேர்தல் நடைபெற்ற நிலையில், அப்போது பிஆர்எஸ் கட்சி 119 இடங்களில் 88 இடங்களைக் கைப்பற்றி மெகா வெற்றியைப் பதிவு செய்தது. அடுத்து வந்த காங்கிரஸ் கட்சியால் வெறும் 19 இடங்களில் மட்டுமே வெல்ல முடிந்தது.
தெலுங்கானா: இருப்பினும் இப்போது அங்கே நிலைமை மாறியுள்ளது. கடந்த 2018இல் இருந்ததை போல அங்கு நிலைமை இல்லை. கேசிஆர் ஆட்சிக்கு எதிராக மக்களிடையே சற்று அதிருப்தி ஏற்பட்டுள்ளதாம். தெலுங்கானாவில் இப்போது கேசிஆர் கட்சிக்குக் காங்கிரஸ் இடையே கடும் போட்டி கொடுத்து வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய பிஆர்எஸ் பிரமுகர்கள் காங்கிரஸில் ஐக்கியமாகினர்.
இது வரும் காலத்திலும் தொடரும் என்றும் பிஆர்எஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து பலரும் காங்கிரஸில் இணைவார்கள் என்று அக்கட்சியினர் தெரிவித்தனர். இந்தாண்டு இறுதியில் தெலுங்கானாவில் தேர்தல் நடக்கும் நிலையில், காங்கிரஸ் தீவிரமாகத் தேர்தல் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. கர்நாடக தேர்தல் வெற்றியால் இந்த முறை தெலுங்கானா தேர்தலை நம்பிக்கையுடன் காங்கிரஸ் எதிர்கொள்கிறது.

5 வாக்குறுதிகள்: இதற்காக வரும் செப். 17ஆம் தேதி தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் மெகா பேரணி ஒன்றை நடத்தி, அங்கிருந்து தேர்தல் பிரசாரத்தைத் தொடங்க அவர்கள் முடிவு செய்துள்ளனர். கர்நாடகா தேர்தலில் முன்வைத்ததை போலவே எளிமையாக 5 வாக்குறுதிகளை அறிவித்து, அதை முன்வைத்து பிரசாரம் செய்யவும் இவர்கள் திட்டமிட்டுள்ளனர். மேலும், இதில் ஆளும் கேசிஆர் கட்சியின் ஊழல் புகார் பட்டியலையும் வெளியிட அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
இந்த பேரணி வரும் செப். 17ஆம் தேதி நடைபெறும் நிலையில், அதற்கு ஒரு நாள் முன்னதாக அதாவது செப். 16ஆம் தேதி காங்கிரஸ் கமிட்டி ஆலோசனைக் கூட்டத்தையும் நடத்த முடிவு செய்துள்ளனர். அதைத் தொடர்ந்து நடக்கும் மெகா பேரணியில் காங்கிரஸ் தலைவர், துணைத் தலைவர்கள் மற்றும் மற்ற முக்கிய தலைவர்கள் அனைவரும் கலந்து கொள்கிறார்கள். இதில் தான் காங்கிரஸ் 5 வாக்குறுதிகளை அறிவிக்க உள்ளது.

கேம் சேஞ்சர்: ஹைதராபாத் மாகாணம் இதே 1947 செப். 17ஆம் தேதி தான் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. இதனை கேசிஆர் அரசு தேசிய ஒருமைப்பாடு தினமாகக் கொண்டாடுவதாக அறிவித்துள்ளது. இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையிலேயே காங்கிரஸ் அதே நாளில் இந்த மெகா பேரணியையும் நடத்த உள்ளது. இதில் அறிவிக்கப் போகும் அந்த 5 வாக்குறுதிகள் தெலுங்கானா தேர்தலில் கேம் சேஞ்சராக இருக்கும் என்றும் காங்கிரஸ் தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
மேலும், ஆந்திர முதல்வர் ஜெகனின் சகோதரி சர்மிளா ஒய்எஸ்ஆர் தெலுங்கானா என்ற கட்சியை நடத்தி வரும் நிலையில், அவரும் செப். 17ஆம் தேதி காங்கிரஸ் உடன் இணைவார். இந்த நிகழ்வுக்குப் பிறகு தெலுங்கானாவில் வரும் நாட்களில் மேலும் பிரசாரத்தை தீவிரப்படுத்த காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.












Click it and Unblock the Notifications