இந்தியாவில் தலைநகரே இல்லாத ஒரே மாநிலம்.. 10 ஆண்டுகளில் இப்படியொரு சிக்கலா.. எப்போது சரியாகும்?
ஹைதராபாத்: தமிழ்நாட்டின் தலைநகர் சென்னை. அதுபோல கர்நாடகாவுக்குப் பெங்களூர், கேரளாவுக்குத் திருவனந்தபுரம், மகாராஷ்டிராவுக்கு மும்பை தலைநகராக இருக்கிறது. ஆனால், இந்தியாவில் தலைநகரம் இல்லாமல் ஒரு மாநிலம் இருக்கிறது என்றால் அது ஆந்திரப் பிரதேசம். ஏன் ஆந்திராவுக்கு மட்டும் இப்போது தலைநகர் இல்லை. இதற்கான காரணம் என்ன என்பது குறித்துப் பார்க்கலாம்.
கடந்த 2014ம் ஆண்டு ஆந்திர மாநிலத்தில் இருந்து தனியாகத் தெலுங்கானா உருவாக்கப்பட்டது. அதன் பிறகு ஏற்பட்ட அரசியல் மற்றும் நிர்வாக முடிவுகளால் தான் இப்போது ஆந்திராவுக்குத் தனியாகத் தலைநகர் இல்லாத சூழல் உருவாகி இருக்கிறது.

ஆந்திரப் பிரதேசம்: ஒருங்கிணைந்த ஆந்திராவாக இருந்த போது அதன் தலைநகராக ஹைதராபாத் இருந்தது. ஆனால், அது இரண்டு மாநிலங்களாகப் பிரிக்கப்பட்ட தெலுங்கானா வசம் ஹைதராபாத் சென்றுவிட்டது. இதனால் ஆந்திராவுக்குத் தலைநகர் இல்லாத சூழல் ஏற்பட்ட நிலையில், இதற்காகத் தற்காலிக ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி தெலுங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேசம் என இரு மாநிலங்களுக்கும் அடுத்த 10 ஆண்டுகள் பொது தலைநகராக ஹைதராபாத் இருக்கும் என அறிவிக்கப்பட்டது.
இருப்பினும், அப்போது ஆந்திராவில் இருந்த அரசியல் தலைமை ஹைதராபாத்தில் இருந்து செயல்பட வேண்டாம் என முடிவெடுத்தது. தலைநகராக அறிவிக்கப்பட்ட அமராவதி கட்டி முடிக்கப்படும் வரை குண்டூர் மாவட்டத்தில் வெலகபுடியில் ஒரு தற்காலிக அமைப்பை உருவாக்கி அங்கிருந்து அரசு நிர்வாகம் செயல்படத் தொடங்கியது.
தலைநகர் எது: அதிகாரப்பூர்வ தலைநகராக ஹைதராபாத் தொடர்ந்தது. அதேநேரம் ஹைதராபாத்தைத் தலைநகராகப் பகிர்ந்து கொள்வதற்கான காலக்கெடு கடந்த ஜூன் 2ம் தேதியுடன் நிறைவடைந்தது. இதனால் ஆந்திராவுக்குத் தலைநகரமே இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது.
சட்டமன்றம், நிர்வாக அலுவலகங்கள் மற்றும் நீதித்துறை போன்ற முதன்மை அரசு அமைப்புகளை உள்ளடக்கிய நிர்வாக மையமாக மாநில தலைநகரம் இருப்பதால் அது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இதுபோல முக்கிய அமைப்புகள் ஒரே இடத்தில் இருப்பது மாநில அரசு விரைந்து செயல்படப் பெரியளவில் உதவியாக இருக்கிறது.
ஏன் முக்கியம்: அரசியல், கலாச்சார மற்றும் பொருளாதாரத்தின் மையப்புள்ளியாக ஒரு மாநிலத்தின் தலைநகர் இருக்கிறது. மேலும், எப்போதும் ஒரு தலைநகரம் தான் பெரும்பாலும் மாநிலத்தின் அடையாளம் மற்றும் பாரம்பரியத்தை எடுத்துக் காட்டுவதாக இருக்கிறது. அப்படிப்பட்ட முக்கியமான தலைநகரே ஆந்திராவுக்கு இப்போது இல்லை.
அமராவதியின் நிலை என்ன: ஆந்திரா பிரிக்கப்பட்ட போது மாநிலத்தின் மையப்பகுதியில் குண்டூர் மாவட்டத்தில், கிருஷ்ணா நதிக்கரையில் அமைந்துள்ள அமராவதி தலைநகராக டெவலப் செய்யப்படும் என அப்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்தார்.
மீண்டும் அமராவதி: ரூ. 51,000 கோடி செலவில் ஆந்திரப் பிரதேசத்திற்கு உலகத் தரம் வாய்ந்த ஸ்மார்ட் தலைநகரை உருவாக்க உள்ளதாக சந்திரபாபு நாயுடு அறிவித்தார். தலைநகரை உருவாக்க விவசாயிகளிடமிருந்து 33,000 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்தினார்.. மேலும், இதற்காகச் சிங்கப்பூரைச் சேர்ந்த நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களும் போடப்பட்டன.
கட்டுமானம் வேகமெடுத்த போதிலும் கடந்த 2018இல் ஆந்திராவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட உடன் அமராவதி திட்டத்தை ஜெகன்மோகன் ரெட்டி அரசு அமராவதிக்கான பட்ஜெட்டை குறைத்தது. இதனால் சிங்கப்பூர் நிறுவனங்கள் இந்த திட்டத்தில் இருந்தும் வெளியேறின. அதன் பிறகு திடீரென ஆந்திராவுக்கு மூன்று தலைநகரை உருவாக்க உள்ளதாக ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்தார். இருப்பினும், அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பவே உச்ச நீதிமன்றம் வரை இந்த விவகாரம் சென்றது. இதன் காரணமாகவே 10 ஆண்டுகளுக்கு பிறகும் ஆந்திராவால் தலைநகரை உருவாக்க முடியவில்லை.
தலைநகரே இல்லை: அதேநேரம் ஜூன் மாதம் ஆந்திர அரசியல் மொத்தமாக மாறியது. சந்திரபாபு நாயுடு மீண்டும் முதல்வராகப் பதவியேற்றுள்ள நிலையில், அமராவதி மீண்டும் சீனுக்குள் வந்துள்ளது. அமராவதி மக்கள் தலைநகர் என்ற பெயரில் வெள்ளை அறிக்கை வெளியிட்ட சந்திரபாபு நாயுடு விரைந்து அமராவதியை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சந்திரபாபு நாயுடு அறிவித்தார். இதற்கான பணிகள் விரைந்து நடந்து வருகிறது என்ற போதிலும் இப்போது தலைநகர் இல்லாத சூழலே ஆந்திராவில் நிலவுகிறது.












Click it and Unblock the Notifications