12 தமிழக நகரங்கள் 'ஸ்மார்ட் சிட்டி'யாகிறது! 'அம்ருட்' ஸ்கீமுக்கு 33 நகரங்கள் தேர்வு!!
டெல்லி: நகர்ப்புற மேம்பாட்டு திட்டங்களின் கீழ் தமிழகத்தின் 12 நகரங்களை ஸ்மார்ட் சிட்டியாக்க மத்திய அரசு தேர்வு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் வாஜ்பாய் பெயரிலான அம்ருட் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 1 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட 33 நகரங்களையும் மேம்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
நாடு முழுவதும் 100 நகரங்களை தேர்வு செய்து ஸ்மார்ட் சிட்டிகளாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதேபோல் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பெயரிலான "அடல் மிஷன் பார் ரிஜுவனேஷன் அண்ட் அர்பன் டெவலப்மென்ட் ஸ்கீம்" என்கிற அம்ருட் திட்டத்தின் கீழ் 500 நகரங்கள் மேம்படுத்தப்பட உள்ளன. இந்த இரு திட்டங்களையும் பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்க உள்ளார்.

ஸ்மார்ட் சிட்டி
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் உத்தரப் பிரதேச மாநிலத்தில் 13 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதற்கு அடுத்தபடியாக தமிழகத்தில் 12 நகரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன..

மகாராஷ்டிராவில் 10
மகாராஷ்டிரத்தில் 10, குஜராத், கர்நாடகத்தில் தலா 6, மேற்குவங்கம், ராஜஸ்தானில் தலா 4 நகரங்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனவாம்.

8 மாநிலங்களில்..
பீகார், ஆந்திரா, பஞ்சாப் மாநிலங்களில் தலா 3 நகரங்களும், டெல்லி, ஜம்மு -காஷ்மீர், கேரளா, அஸ்ஸாம் உள்ளிட்ட 8 மாநிலங்களில் தலா ஒரு நகரமும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

தரவரிசை..
இந்த 100 நகரங்களும் பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் தரவரிசைப்படுத்தப்படும். தரவரிசையில் முதல் 20 இடங்களில் வரும் நகரங்களில் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான நிதி, நடப்பாண்டிலேயே ஒதுக்கப்படும்.
தரவரிசையில் அடுத்துள்ள 40 நகரங்களுக்கு அடுத்த நிதியாண்டிலும், மீதமுள்ள 40 நகரங்களுக்கு 2017-18-ஆம் நிதியாண்டிலும் நிதி ஒதுக்கப்படும்.
இந்த நகரங்களில் உலகத்தர சாலை வசதி, 24 மணி நேரமும் மின் வசதி, குடிநீர், சுகாதாரம், மருத்துவம் போன்ற அடிப்படை கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும்.

அம்ருட் திட்டம்..
வாஜ்பாய் பெயரிலான அம்ருட் திட்டத்தின் கீழ் 1 லட்சம் மக்கள் தொகைக்கு மேற்பட்ட நகரங்கள் தேர்வு செய்யப்பட்டு அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் மேம்படுத்தப்படும். இதற்காக நாடு முழுவதும் 500 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

உ.பியில் 54, தமிழகத்தில் 33 நகரங்கள்
இந்த அம்ருட் திட்டத்தின் கீழ் உத்தரபிரதேசத்தில் 54, தமிழகத்தில் 33 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. மகாராஷ்டிராவில் 37 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாம்.

அரசியல்?
இந்த இரு திட்டங்களுக்கும் மத்திய அரசு தேர்வு செய்துள்ளதாக கூறப்படும் நகரங்களில் உத்தரப் பிரதேசம், தமிழ்நாடு, மகாராஷ்டிரம், மத்தியப் பிரதேசம், குஜராத், கர்நாடகம், ஆந்திரம், ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியாணா, தெலங்கானா, சத்தீஸ்கர் ஆகிய 12 மாநிலங்களில் மட்டும் 70% நகரங்கள் இடம்பெற்றுள்ளன. இவற்றில் 8 மாநிலங்களில் பாரதிய ஜனதா அல்லது பாரதிய கூட்டணி அல்லது அதற்கு நெருக்கமான கட்சியே ஆட்சியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications