16 வயது தலித் சிறுமியை சிதைத்த கொடூரன்.. புகாரை வாபஸ் வாங்குமாறு மிரட்டியதால் சோக முடிவு! அதிர்ச்சி!
லக்னோ: உத்தர பிரதேச மாநிலத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 16 வயது தலித் சிறுமி, தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் பாராபங்கி மாவட்டத்தில் உள்ள ஹைதர்கர் பகுதியைச் சேர்ந்த 16 வயது தலித் சிறுமி, அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். அண்மையில் அப்பகுதியைச் சேர்ந்த ஒருவரால் அந்தச் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட நிலையில், சோக முடிவைத் தேடிக் கொண்டுள்ளார்.

பாலியல் பலாத்காரம் தொடர்பாக கொடுத்த புகாரை வாபஸ் வாங்குமாறு மிரட்டி வந்த குற்றவாளியை போலீசார் கைது செய்யாததால் தான் தங்களது மகள் தற்கொலை செய்துகொண்டு தனது வாழ்க்கையை முடித்துக்கொண்டதாக அவரது பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக அம்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தினேஷ் குமார் சிங் கூறுகையில், "ஜூன் 17ஆம் தேதி ஹைதர்கர் காவல் நிலையத்தில் பலாத்கார வழக்கு பதிவு செய்யப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார். பாதிக்கப்பட்ட சிறுமி தனது வாக்குமூலத்தைப் பதிவு செய்ய மாஜிஸ்திரேட் முன் ஆஜராக இருந்தார்.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட அந்தச் சிறுமி தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவரது உடலை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளோம், தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது" என்று தெரிவித்துள்ளார்.
மேலும், "இந்த வழக்கில் போலீசாரின் நடவடிக்கை குறித்து குடும்பத்தினர் கூறிய குற்றச்சாட்டுகளும் விசாரிக்கப்பட்டு வருகின்றன. விசாரணை அதிகாரி யோகேந்திர பிரதாப் சிங் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்" என்று எஸ்பி தினேஷ் குமார் சிங் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications