சுதந்திரத்திற்கு பிறகு முதல் முறையாக மின்சார வெளிச்சம்.. ஜம்மு காஷ்மீரின் 2 கிராம மக்கள் மகிழ்ச்சி!
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் 2 தொலைதூர கிராமங்களுக்கு சுதந்திரம் கிடைத்த 75 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக இன்று மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது.
இந்தியா பாகிஸ்தான் எல்லையில் உள்ள ஜம்மு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் சம்ரித் சீமா யோஜனா திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட இரண்டு 250 கிலோ வாட் துணை மின் நிலையங்களை காஷ்மீர் பிரதேச ஆணையர் வி.கே.பிதுரி இன்று திறந்து வைத்தார். இதன் மூலம், இதுவரை மின்சார வசதியே இல்லாத 2 கிராமங்களுக்கு மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ செய்திக் குறிப்பில், "ஒரு வரலாற்று தருணத்தில், குப்வாரா மாவட்டத்தின் கெரான் பகுதியில் உள்ள குந்தியன் மற்றும் பட்ரூ கிராமங்களில் வசிப்பவர்கள் 75 ஆண்டுகளில் முதல் முறையாக மின்சாரத்தின் மகிழ்ச்சியை இன்று அனுபவித்தனர்.
ஒரு காலத்தில் தனிமைப்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு கிரிட் இணைப்பைக் கொண்டு வந்த லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹாவின் நிர்வாகத்திற்கு அப்பகுதி நன்றி தெரிவித்தனர். பல தசாப்த கால காத்திருப்பின் முடிவைக் குறிக்கும் வகையில் அவர்களின் வீடுகளில் விளக்குகள் ஒளிர்ந்துள்ளன. அவர்கள் முகங்களில் மகிழ்ச்சி மலர்ந்துள்ளது.
இதனால் குழந்தைகள் மின்சார விளக்குகளின் கீழ் படிக்க முடியும். குப்வாராவில் உள்ள காஷ்மீர் பவர் டிஸ்ட்ரிபியூஷன் கார்ப்பரேஷன் லிமிடெட் (KPDCL) மின்சாரப் பிரிவால் இரண்டு மாதங்களில் மின்மயமாக்கல் திட்டம் நிறைவடைந்துள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டின் இறுதிக்குள், கெரானில் உள்ள அனைத்து கிராமங்களும் BSNL மொபைல் நெட்வொர்க் கவரேஜ் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மேம்படுத்தப்பட்ட செல்போன் இணைப்புக்காக ஏர்டெல் மற்றும் ஜியோவை இணைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications