மனநோயால் அவதிப்படும் இந்திய முதியவர்கள்.... ஆய்வில் அதிர்ச்சித் தகவல்
லக்னோ: இந்தியாவில் வாழும் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களில் சுமார் 20 சதவீதம் பேர் மனம் சார்ந்த நோய்களில் சிக்கி அவதிப்படுவதாக அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது சமீபத்திய ஆய்வறிக்கை ஒன்று.
சமீபத்தில் சர்வதேச முதியவர்கள் தினம் கொண்டாடப்பட்ட நிலையில் இந்திய முதியவர்களின் நிலைமை படு மோசமாக உள்ளதாக சர்வதேச ஆய்வறிக்கை ஒன்று வெளியானது. மேலும், அதில் இந்திய முதியவர்கள் பலர் தாங்களே உழைத்து சாப்பிட வேண்டிய அவல நிலையில் உள்ளதையும் சுட்டிக் காட்டப்பட்டது.
இந்நிலையில், இந்திய முதியவர்களில் 20 சதவீதம் பேர் மனம் சார்ந்த பிரச்சினைகளில் சிக்கியுள்ளதாக சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

முதியவர்களின் மனநிலை....
உத்திரப்பிரதேசத்தில் உள்ள சத்ரபதி சாஹீஜி மருத்துவ பல்கலைக்கழகம் மற்றும் புதுவையில் உள்ள ஜிப்மர் மருத்துவ பல்கலைக்கழகம் ஆகிய இரண்டும் இணைந்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் ஆதரவுடன் முதியவர்களின் மனநலம் குறித்து ஆய்வு ஒன்று மேற்கொண்டது.

உலக மனநல தினம்...
உலக மனநல தினமான கடந்த 10-ம் தேதி இந்த ஆய்வறிக்கையின் முடிவுகள் வெளியிடப்பட்டன. அதன்படி, இந்தியாவில் வாழும் 60 வயதிற்கு அதிகமான முதியவர்களில் 20 சதவீதம் பேர் மனநலம் சார்ந்த பிரச்சினைகளால் அவதிப்படுவதாக தெரிய வந்துள்ளது.

கிராமத்தில் அதிகம்...
இதன் அளவு நகர்புறத்தில் 17.3 சதவீதமாகவும், கிராமப்புறத்தில் 23.6 சதவீதமாகவும் பதிவாகியுள்ளதாம்.

ஆயுட்காலம் அதிகரிப்பு...
1947 வரை 32 வயதாக இருந்த சராசரி இந்தியரின் ஆயுட்காலம் 2011ல் 63.4 ஆக உயர்ந்ததன் விளைவாக 60 வயதுக்கு மேற்பட்ட முதியோரின் எண்ணிக்கை 7.1 ஆகி உள்ளதாக இந்த அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

உயரும் எண்ணிக்கை....
இதனடிப்படையில், 2050-ம் ஆண்டுக்குள் இந்திய மக்கள் தொகையில் ஒட்டுமொத்தமாக 55 சதவீத வளர்ச்சி ஏற்படும் எனவும், அப்போது 60 வயதுக்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை 326 சதவீதமும் 80 வயதுக்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை 700 சதவீதமாகவும் உயரும் எனவும் கணக்கிடப்பட்டுள்ளது.

மனநோய்த் தாக்கம்....
தற்போதைய நிலவரப்படி 1.71 கோடி முதியவர்கள் மனநோய் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும், இந்த எண்ணிக்கை எதிர்காலத்தில் கூடும் எனவும் எச்சரிக்கப் பட்டுள்ளது.

பரிந்துரை....
இந்த மாற்றத்திற்கு தக்கவாறு 7.2 லட்சம் உள்நோயாளிகளை கையாளும் வசதியும், 7 ஆயிரத்து 200 மனநல நிபுணர்களும், இதே எண்ணிக்கையிலான மனநல சமூக நல பணியாளர்களும் 14 ஆயிரத்து 400 மருத்துவ அதிகாரிகளும் 72 ஆயிரம் செவிலியர்களும், 1 லட்சத்து 44 ஆயிரம் உதவியாளர்களும் மருத்துவத் துறைக்கு தேவைப்படுவார்கள் என அந்த அறிக்கை பரிந்துரை செய்துள்ளது.












Click it and Unblock the Notifications