பள்ளத்தாக்கில் கவிழ்ந்த பயணிகள் பேருந்து.. 36 பேர் பலி! உத்தரகாண்டில் ஷாக்
டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில் பயணிகள் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் 36 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயமடைந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. விபத்தில் சிக்கியவர்களை மீட்க பேரிடர் மீட்பு படையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டிருக்கின்றனர்.
இன்று அதிகாலை சுமார் 42 பயணிகளுடன் பேருந்து ஒன்று அல்மோராவில் உள்ள மார்ச்சுலா அருகே வந்துக்கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்து, தடுப்புகளை உடைத்துக்கொண்டு பள்ளத்தாக்கில் விழுந்திருக்கிறது. அந்த வழியாக சென்ற வாகனங்களில் பயணித்தோர் இந்த விபத்தை நேரடியாக பார்த்திருக்கின்றனர். இதனையடுத்து உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டிருக்கிறது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடனடியாக மீட்பு படையினருக்கு தகவல் கொடுத்திருக்கின்றனர்.

தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினருடன் போலீசாரும் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு வருகின்றனர். விபத்து குறித்து அதிகாரிகள் கூறுகையில் "42 இருக்கைகள் கொண்ட பேருந்து விபத்தில் சிக்கியிருக்கிறது. நாங்கள் சம்பவ இடத்திற்கு வந்த உடனேயே மீட்பு படையினருக்கு தகவல் கொடுத்திருக்கிறோம். இந்த பேருந்து நைனிதண்டாவின் கிராத்தில் இருந்து ராம்நகர் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, மார்ச்சுலா அருகே ஒரு திருப்பத்தில், கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் பாய்ந்திருக்கிறது. மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன" என்று கூறியுள்ளார்.
மீட்பு பணிகள் குறித்து முதல்வர் புஷ்கர் சிங் தாமி, தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு அதிகாரிகளிடம் பேசியிருப்பதாகவும், மீட்பு பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், விபத்திற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். மீட்கப்பட்டவர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். இவர்களில் பலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால், உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. பேருந்து விபத்தில் 36 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் உத்தரகாண்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications