சிம்லாவில் 2-வது கூட்டம்.. 2024 தேர்தலை ஒன்றாக சந்திப்போம்.. நிதிஷ்குமார் பேட்டி
பாட்னா: எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் முடிந்த பிறகு நிதிஷ்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, பாஜக அல்லாத பெரும்பாலான மாநில முதல்வர்கள் கூட்டத்தில் பங்கேற்றதாகவும் 2-வது எதிர்க்கட்சிகள் கூட்டம் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் சிம்லாவில் நடைபெறும் என்று கூறினார்.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்பதில் எதிர்க்கட்சிகள் உறுதியாக உள்ளன. எதிர்க்கட்சிகள் தனித்தனியாக பிரிந்து இருந்தால் அது பாஜகவுக்கு பலமே இருப்பதாக கருதும் அரசியல் தலைவர்கள் கூட்டாக தேர்தலை சந்தித்தால் மட்டுமே பாஜகவை வீழ்த்த முடியும் என கருதினர். இதற்கான முன்னெடுப்புகளை பீகார் முதல்வரும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான நிதிஷ்குமார் மேற்கொண்டார்.

எதிர்க்கட்சித் தலைவர்களை சந்தித்து தொடர்ந்து ஆலோசனை நடத்தி வந்த நிதிஷ் குமார், எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் ஒன்றையும் நடத்த முடிவு செய்தார். அதன்படி, எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் பீகார் தலைநகர் பாட்னாவில் இன்று நடைபெற்றது. காலை 11.30 மணியளவில் கூடிய இந்த கூட்டம் சுமார் 4 மணி நேரம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே, ராகுல் காந்தி, தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சரத் பவார், சிவசேனா கட்சியின் உத்தவ் தாக்கரே, ஜம்முகாஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி, கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்கள் என 16 எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்றன. இந்தக் கூட்டத்தில் பாஜகவை எதிர்கொள்வது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.
கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த நிதிஷ்குமார், "2024 ஆம் ஆண்டு தேர்தலை ஒருங்கிணைந்து எதிர்கொள்ள முடிவு செய்து இருப்பதாகவும் கூட்டம் பாசிட்டிவ் ஆன முறையில் நடைபெற்றது என்றும் தெரிவித்தார். மேலும் எதிர்க்கட்சிகளின் 2-வது ஆலோசனைக் கூட்டம் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் சிம்லாவில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் நடைபெறும் எனவும் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications