அடுத்தடுத்து தண்ணீரில் மூழ்கிய மாணவிகள்.. பதறிய பெற்றோர்.. ஓடி வருவதற்குள் நடந்த விபரீதம்
சித்தூர்: கோவில் திருவிழாவுக்கு சென்ற இடத்தில் 3 மாணவிகள் குளத்தில் மூழ்கி பலியான சம்பவம் ஆந்திராவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
வேலூர் மாவட்டம் அரவட்லா மலை கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி என்பவரது மகள் பவ்யா. இவருக்கு 18 வயதாகிறது. பவ்யா பேரணாம்பட்டு அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார். சுப்பிரமணியின் உறவினர் வெங்கட்ராமன். இவரது மகள் மோனிகா (15), அரவட்லா அரசு உயர்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

உறவினர்களான இவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் நேற்று முன்தினம் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் கோட்ரபல்லி கிராமத்தில் மலைப்பகுதியில் அமைந்துள்ள அம்மன் கோவிலுக்கு சென்றனர். அங்கு கோயிலில் கிடா வெட்டி நேர்த்தி கடன் செலுத்தும் விழாவில் கலந்து கொண்டனர்.
அப்போது பவ்யா, மோனிகா மற்றும் ஆந்திர மாநிலம் கோட்ரப்பல்லி கிராமத்தை சேர்ந்த உறவினர் கதிரப்பன் என்பவரது மகள் 9-ம் வகுப்பு படிக்கும் கவுதமி (14) ஆகிய 3 பேரும் திருவிழா நடந்த மலைப்பகுதியை சுற்றி பார்த்துள்ளனர். பின்னர் மதியம் சுமார் 1 மணியளவில் அங்குள்ள குளத்தில் குளித்துள்ளனர். அப்போது அவர்கள் குளத்தில் ஆழமான பகுதிக்கு அவர்கள் சென்று விட்டதாக கூறப்படுகிறது.
இதனால் தண்ணீரில் மூழ்கிய அவர்கள் தங்களை காப்பாற்றும்படி கூச்சலிட்டுள்ளார்கள். கிராம மக்கள் விரைந்து சென்று 3 பேரையும் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள் ஆனால் குளத்தின் ஆழமான பகுதியில் சகதியில் சிக்கி 3 பேரும் மூச்சு திணறி இறந்து விட்டனர். திருவிழாவுக்கு சென்ற மாணவிகள் குளத்தில் மூழ்கி இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications