வங்கதேசத்தில் வெடித்த வன்முறை! மேகாலயா, திரிபுரா வழியாக தாயகம் திரும்பும் இந்திய மருத்துவ மாணவர்கள்!
டாக்கா: வங்கதேசத்தில் அரசு வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு சீர்திருத்தம் தொடர்பான மாணவர்கள் போராட்டம் நடத்தி வருவதால் பெரும் வன்முறை ஏற்பட்ட நிலையில் 300 -க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் தாயகம் திரும்பியுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் மருத்துவம் பயிலும் மாணவர்கள் ஆவர்.
கடந்த 1971 ஆம் ஆண்டு வங்கதேச நாட்டின் விடுதலைக்காக போராட்டத்தில் உயிரிழந்த படைவீரர்களின் குடும்பத்தினர் மற்றும் சில குறிப்பிட்ட குழுக்களுக்கு அரசு வேலைவாய்ப்புகளை பாதிக்கும் அதிகமான இடஒதுக்கீடு வழங்கப்படுவதை ரத்து செய்ய வேண்டும் என மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இந்த இடஒதுக்கீடு முறை பாரபட்சமான வகையில், வங்கதேச சுதந்திர போராட்டத்தை வழிநடத்திய அவாமி லீக் கட்சியை சேர்ந்த பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆதரவாளர்களுக்கு ஆதரவாக உள்ளது என மாணவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். மேலும் வேலைவாய்ப்பு தகுதியின் அடிப்படையில்தான் வழங்கப்பட வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆனால் ஷேக் ஹசீனாவோ இட ஒதுக்கீட்டு விவகாரத்தில் அரசியல் செய்யாமல் படைவீரர்களின் பங்களிப்புக்கு அதிக மரியாதை தரப்பட வேண்டும் என தெரிவித்தார். இந்த நிலையில் இந்த இடஒதுக்கீட்டு முறையை எதிர்த்து டாக்கா பல்கலைக்கழக்தில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்தப் போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறையில் 105 பேர் இறந்துவிட்டனர்.
1500 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து நேற்றைய தினம் வங்கதேசம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் நாட்டில் அமைதியை நிலைநாட்ட ராணுவத்தை அனுப்பவும் அரசு உத்தரவிட்டுள்ளது.
போராட்டக்காரர்களை கலைக்க போலீஸார் கண்ணீர் புகைக் குண்டு, ரப்பர் குண்டுகளை பயன்படுத்தி வருகின்றனர். தலைநகர் டாக்காவில் நேற்றைய தினம் அனைத்து கூட்டங்களுக்கும் தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் வங்கதேசத்தில் மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளை படித்து வந்த 300 -க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் தாயகம் திரும்பி வருகிறார்கள்.
இவர்கள் வடகிழக்கு மாநில எல்லை வழியாக திரும்புகிறார்கள். இந்த மாணவர்களில் பெரும்பாலானோர் உத்தரப்பிரதேசம், ஹரியானா, மேகாலயா, ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். இந்தியாவில் நீட் தேர்வால் மருத்துவம் படிக்க முடியாத சூழலிலும் தனிப்பட்ட விருப்பத்தின் பேரிலும் இவர்கள் மருத்துவம் படிக்க அங்கு சென்றனர்.
இவர்கள் அனைவரும் திரிபுராவில் உள்ள விமான நிலையம், மேகாலயாவில் உள்ள சர்வதேச விமான நிலையம் மூலமும் இந்தியாவுக்கு வருகை தருகிறார்கள். கடந்த 3 வாரங்களாக இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது. இது குறித்து ஹரியானாவை சேர்ந்த ஆமீர் என்ற மாணவர் கூறுகையில், நான் சிட்டகாங்கில் உள்ள மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறேன்.

வங்கதேசத்தில் சூழல் மோசமாக உள்ளது. இதனால் நாங்கள் உடனடியாக தாயகம் திரும்ப வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டோம். இன்னும் ஏராளமான மாணவர்களும் திரும்பி வந்து கொண்டிருக்கிறார்கள். போராட்டத்தால் இணையதள சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் எங்களால் எங்கள் குடும்பத்தினருடன் பேச முடியவில்லை. விமான டிக்கெட்டுகளும் கிடைக்கவில்லை. இதனால் விமானத்தில் வருவதற்கு பதிலாக அகர்தலா வழியாகவும் நாங்கள் தாயகம் திரும்பி கொண்டிருக்கிறோம். இவ்வாறு ஆமீர் தெரிவித்திருந்தார்.
அது போல் அதே கல்லூரியை சேர்ந்த முகமது என்ற மாணவர் கூறுகையில் வங்கதேசத்தில் வரும் செவ்வாய்க்கிழமை வரை பதற்றமான சூழல் நிலவும். அதன் பிறகு நிலைமை சீராகும் என தெரிகிறது. இதனால் யாரும் கல்லூரியை விட்டோ விடுதியை விட்டோ சொந்த நாடுகளுக்கு செல்ல வேண்டாம் என கல்லூரி நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது என்றார் அவர்.
மேகாலயாவில் மட்டும் 200 க்கும் மேற்பட்ட மாணவர்கள் எல்லையை தாண்டியுள்ளனர். சில மாணவர்கள் பூடான், நேபாளம் வழியாகவும் இந்தியாவுக்கு வருகை தருகிறார்கள். மேகாலயத்தை சேர்ந்த 67 மாணவர்களும் பூடானை சேர்ந்த 7 பேரும் வங்கதேச தூதரகத்துடன் தொடர்பில் இருக்கிறார்கள். இதனால் வங்கதேசத்தில் பதற்றமான சூழல் நிலவுகிறது.












Click it and Unblock the Notifications