ஆன்லைன் சூதாட்ட ஆப் மூலம் வந்த ஆப்பு.. 400 கோடியை சுருட்டிய சீனர்கள்.. அதிர்ச்சி தகவல்
கொல்கத்தா: கொல்கத்தாவில் ஆன்லைன் விளையாட்டு சார்ந்த சூதாட்ட ஆப்கள் மூலம் பலர் ஏமாற்றப்பட்ட வழக்கு குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், சீனாவைச் சேர்ந்த நபர்களால் நடத்தப்படும் இணைய சூதாட்ட செயலிகளில் 400 கோடி ரூபாய் வரை முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக 4 பேரை அமலாக்கத் துறை அதிரடியாக கைது செய்துள்ளது.
ஆன்லைன் சூதாட்டத்துக்கு அடிமையாகி பலர் தங்களது பணத்தை இழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன. பணத்தை இழந்ததோடு மட்டுமல்லாமல் பல்வேறு தற்கொலைகளும் நிகழ்ந்து வருகின்றன. ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டிருந்தாலும் சட்ட விரோதமாக ஆன்லைன் மூலம் பல ஆப்கள் இயங்கிக் கொண்டுதான் இருக்கின்றன. இதன் ஆபத்தை உணர்ந்து அரசு சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இருப்பினும், தொடர்ந்து ஆன்லைன் சூதாட்ட ஆப்கள் மூலம் பணத்தை இழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. இந்நிலையில், கொல்கத்தாவில் சூதாட்ட செயலி மூலம் பலர் ஏமாற்றப்பட்டுள்ளது தெரியவந்தது. இதுதொடர்பாக கொல்கத்தாவில் சட்டவிரோத பணப் பரிவர்த்தனைச் சட்டத்தின்கீழ் அருண் சாஹு, ஆலோக் சாஹு, சேட்டன் பிரகாஷ், ஜோசப் ஸ்டாலின் ஆகிய நான்கு பேரை கைது செய்து, அமலாக்கத் துறை காவலில் எடுத்துள்ளது.
இதுதொடர்பாக அமலாக்கத்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது, 'கொல்கத்தாவில் உள்ள கோசிபூர் காவல் நிலையத்தில் இணைய விளையாட்டு சார்ந்த சூதாட்ட செயலிகள் மூலம் பலர் ஏமாற்றப்பட்டதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்தப் புகார்களின் அடிப்படையில் சட்டவிரோத பணப் பரிவர்த்தனைச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறை விசாரணை மேற்கொண்டு வந்தனர். ஃபைவின் என்ற சூதாட்ட செயலி மூலம் முறைகேடாக ஈட்டப்பட்ட 400 கோடி ரூபாய் பணத்தை 'பைனான்ஸ்' என்ற சர்வதேச கிரிப்டோ வர்த்தக தளத்தின் மூலம் சீனாவைச் சேர்ந்த நபர்களுக்கு அனுப்பப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
இதையடுத்து, அமலாக்கத் துறை அந்த இணையதளத்தின் ஐபி முகவரியை ஆய்வு செய்தது. அதில், அவை சீனாவில் இருந்து செயல்பட்டு வருவது கண்டறியப்பட்டது. டெலிகிராம் செயலியின் மூலம் தற்போது கைது செய்யப்பட்டுள்ள 4 பேரையும் சீனாவில் இருந்து சிலர் தொடர்பு கொண்டுள்ளனர். இந்த 4 பேரையும் 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்க சட்டவிரோத பணப் பரிவர்த்தனைச் சட்டத்தின் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications