வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் ஆற்றை கடந்து 8 மாவோயிஸ்டுகளை வேட்டையாடிய சத்தீஸ்கர் பாதுகாப்பு படை!
ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தில் பெருக்கெடுத்து ஓடிய இந்திராவதி ஆற்றைக் கடந்து போய் 8 மாவோயிஸ்டுகளை வேட்டையாடியிருக்கின்றனர் பாதுகாப்புப் படையினர். மாவோயிஸ்டுகளை அழித்துவிட்டு பாதுகாப்புப் படையினர் ஆற்றைக் கடக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
சத்தீஸ்கர், மகாராஷ்டிரா, ஒடிஷா, ஆந்திரா, பீகார், மேற்கு வங்கம் மற்றும் கேரளா மாநிலங்களில் ஒரு சில இடங்களில் மாவோயிஸ்டுகள் பதுங்கி இருக்கின்றனர். இந்தியாவில் ஆயுதம் மூலம் புரட்சியை உருவாக்க முடியும் என்பது மாவோயிஸ்டுகள் இன்னமும் வைத்திருக்கும் நம்பிக்கை.

பொதுவாக இந்தியாவில் மாவோயிஸ்டுகள் இயக்கம் நிர்மூலமாக்கப்பட்டுவிட்டதாகவும் ஒரு சில இடங்களில் பதுங்கி இருந்து தங்களது இருப்பை வெளிப்படுத்துகின்றனர். சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தல்களை சீர்குலைக்கும் வகையில் பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதல்களை நடத்தினர் மாவோயிஸ்டுகள். இதற்கு எதிராக அதிதீவிரமான நடவடிக்கைகளை பாதுகாப்புப் படையினர் மேற்கொண்டு மாவோயிஸ்டுகளை அடக்கி வைத்திருக்கின்றனர்.
இந்த நிலையில் சத்தீஸ்கர் மாநிலத்தின் பிஜப்பூர், நாராயண்பூர் மாவட்ட எல்லைகளில் வனப்பகுதிகளில் மாவோயிஸ்டுகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது. மாவோயிஸ்டுகள் முகாமிட்டிருக்கும் பகுதி ஆற்றின் மறுகரையில் இருந்தது.
#WATCH | Chhattisgarh: Security forces personnel cross the Indravati River as they return to their headquarters after an encounter with Naxalites in the border area of Narayanpur-Bijapur-Dantewada.
— ANI (@ANI) May 24, 2024
8 Naxalites were killed in the encounter. 8 weapons and other arms and ammunition… pic.twitter.com/UXntEYhpOg
ஆனாலும் பாதுகாப்புப் படையினர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிய நிலையிலும் உயிரை பணயம் வைத்து இந்திராவதி ஆற்றைக் கடந்து போய் மாவோயிஸ்டுகளைத் தேடும் நடவடிக்கையை மேற்கொண்டனர். இதனையடுத்து மாவோயிஸ்டுகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே மோதல் வெடித்தது.
பாதுகாப்புப் படையினர் நடத்திய இந்தத் தாக்குதலில் 8 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து 8 ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
மாவோயிஸ்டுகளை அழித்துவிட்டு பாதுகாப்புப் படையினர் இந்திராவதி ஆற்றைக் கடந்து முகாம்களுக்கும் திரும்பினர். பாதுகாப்புப் படையினர் ஆற்றைக் கடக்கும் வீடியோ பதிவுகள் பெருமிதத்துடன் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. சத்தீஸ்கர் மாநிலத்தின் தண்டேவடா மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இந்த வீடியோவை பதிவை பகிர்ந்திருந்தனர். மாவோயிஸ்டுகளை அழித்த பாதுகாப்புப் படையினரை சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் பெருமிதம் பொங்க பாராட்டுகின்றனர்.












Click it and Unblock the Notifications