சாக்கு பையில் சில்லறைகளுடன் ஐபோன் வாங்க ஷோரூமுக்கு சென்ற "பிச்சைக்காரர்".. கடைக்காரருக்கு ட்விஸ்ட்
ஜோத்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் சாக்கு பையில் காசுகளுடன் வந்த பிச்சைக்காரர் ஐபோன் 15 ரக போனை வாங்கினார்.
ஆள் பாதி ஆடை பாதி என்பார்கள், பெரும்பாலான இடங்கள், கடைகளில் ஆளின் அந்தஸ்தை பார்த்துத்தான் உள்ளே விடுவார்கள். அது போல் நட்சத்திர ஹோட்டல்களுக்கு சென்றால் கூட காரில் சென்றால் மட்டுமே சில இடங்களில் அனுமதி அளிக்கப்படுகிறது.

ஒரு சில மால்களில் வேட்டியுடன் சென்றால் அனுமதி இல்லை என்கிறார்கள். நாம் அணியும் ஆடை நம் அந்தஸ்தை உயர்த்தி காட்டுகிறது. இதற்காகத்தான் ஆள் பாதி ஆடை பாதி என்றார்கள். ஒரு சில திருமண விசேஷங்களுக்குக் கூட பத்திரிகை இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
இந்த நிலையில் ஒரு ஐபோன் வாங்க கிழிந்த அழுக்கு துணியுடன் சாக்கு மூட்டை நிறைய காசுகளுடன் ஷோரூமுக்குள் வந்தார். பிச்சைக்காரர் போல் இருந்ததால் அவரை பலர் கடைக்குள் விடவே மறுத்துவிட்டனர். இன்னும் சிலர் அந்த சில்லறை காசுகளை வாங்க முடியாது என கூறிவிட்டனர். இதையடுத்து அவரும் மனம் தளராமல் கடை கடையாக ஏறி இறங்கினார்.
இந்த நிலையில் ஜோத்பூரில் உள்ள தீபக் என்ற செல்போன் விற்பனையகத்தில் நுழைந்தார். அவரை கடைக்காரர்கள் வரவேற்று உபசரித்து என்ன வேண்டும் என கேட்டனர். ஐபோன் 15 ரக போன் வேண்டும் என்றார். மேலும் தான் அதற்குண்டான பணத்தை சில்லறைகளாகவே கொண்டு வந்ததாக கூறினார். இதை ஏற்ற கடைக்காரர்கள் அவருக்கு போனை காட்டினர்.
ஐபோன் 15 ரக போனை அந்த நபர் வாங்கி அந்த வீடியோ அக்டோபர் 5 ஆம் தேதி சமூகவலைதளங்களில் பதிவிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் பிச்சைக்காரர் போல் இருக்கும் அந்த நபர் கையில் ஐபோனுடன் போஸ் கொடுக்கிறார். ஆனால் அவர் பிச்சைக்காரர் இல்லையாம். யார் எப்படி வந்தாலும் கடையில் மதிக்க வேண்டும் என்பதை உணர்த்துவதற்காகவே அவர் இது போல் உடை அணிந்திருந்தாராம்.
எப்போதும் வெளித்தோற்றத்தை பார்த்து யாரையும் எடை போடக் கூடாது. அவர்களால் இயலாது என தெரிந்தால் அவர்களாகவே அந்த இடத்தை விட்டு சென்றுவிடுவார்கள். அதைவிட்டுவிட்டு தேவையில்லாமல் அவர்களை துரத்திவிடுவது நல்லதல்ல என்பதையும் உணர்த்தவே அவர் அது போல் செய்தாராம். ஐபோன் 15, 15 பிளஸ், 15 ப்ரோ, 15 ப்ரோ மேக்ஸ் ஆகிய போன்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications