மெட்ரோ ரயிலில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு இடம் தர மறுத்த இளம்பெண்! எங்கே இருக்கிறோம் நாம்?
டெல்லி: பேருந்துகளில் முதியோர், ஊனமுற்றவர்கள் சீட்களில் தடி தடியார் இளைஞர்கள் அமர்ந்து கொண்டு அட்டாகாசம் செய்வார்கள். முதியோர்களுக்கு இடம் தர மறுத்துவிடுவார்கள். ஒருவழியாக கண்டக்டரிடம் போராடி இடம் பெற்று பயணிக்கலாம். ஆனால் டெல்லி மெட்ரோ ரயிலில் நடந்த சம்பவமோ சற்றே கொடுமையான விசயம். கூட்டமாக இருந்த ரயில் பெட்டியில் ஏறி நிற்க முடியாமல் சிரமப்பட்ட கர்ப்பிணிப் பெண் ஒருவர் வாய் விட்டு இடம் கேட்டும் கொடுக்க மறுத்துவிட்டார் ஒரு இளம் பெண்.
அந்த இளம்பெண்ணின் செயல் கொஞ்சம் கூட மனச்சாட்சியற்றது என்றாலும், அந்த மெட்ரோ ரயிலில் உடன் பயணித்த எந்த பெண் பயணிகளுமே அந்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு இடம் கொடுக்கவில்லை என்பது அதை விட கொடுமையான விசயம்.
பெண்கள் மட்டுமே ஏறக்கூடிய அந்தப் பெட்டியில் ஏறிய கர்ப்பிணிப் பெண் நிற்க முடியாமல் தடுமாற்றத்துடனேயே அங்கிருந்த ஒரு இளம் பெண்ணிடம் இடம் கேட்கிறார்.
அவர்களிடையே நடைபெற்ற உரையாடலைப் படியுங்களேன்...
கர்ப்பிணிப் பெண்: எனக்கு கொஞ்சம் இடம் கொடுக்கறீங்களா?
இளம்பெண்: முடியாது
கர்ப்பிணிப் பெண்: நான் துவாரகா வரைக்கும் போகவேண்டும்
இளம்பெண்: (அலட்சியமாக) நானும்தான் போகணும்
கர்ப்பிணிப் பெண்: நான் கர்ப்பமா இருக்கேன் என்னால நிற்க முடியல அதனாலதான் கேட்டேன்
இளம் பெண்: அதனால என்ன? அதுக்கு நான் என்ன செய்ய முடியும்?
கர்ப்பிணிப் பெண்: ப்ளீஸ் கொஞ்சம் உட்கார இடம் கொடுங்களேன்
இளம்பெண்: இங்கிருந்து போங்க... நான் சீட் தரமுடியாது... வேற யார்கிட்டயாவது போய் கேளுங்க.
கர்ப்பிணிப் பெண்: ஆனா... ஏன்?
இளம்பெண்: ஏன்னா நான் உட்காரணும்... என்று கூறிவிட்டு காதுகளில் ஹெட்போனை மாட்டிக்கொண்டு கைகளால் முகத்தை மூடிக்கொண்டு பாட்டு கேட்க ஆரம்பித்து விட்டார் அந்த இளம்பெண்.
இதைப் பார்த்துக்கொண்டிருந்த ஒருவர் கூட அந்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு இடம் தரவில்லை என்பதுதான் சோகம்.
சாதாரணமாக கர்ப்பிணிகள் நின்றாலே எழுந்து இடம் கொடுப்பார்கள். ஆனால் தன்னால் நிற்க முடியவில்லை, இடம் கொடுங்கள் என்று வாய்விட்டு கேட்டும் மறுத்துவிட்டார் அந்த இளம் பெண். இன்றைக்கு பெரும்பாலோனோர் சுயநலமிகளாக மாறி வருகின்றனர் என்பதைத்தான் இந்த சம்பவம் உணர்த்துகிறது.













Click it and Unblock the Notifications