நேபாளத்தில் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட பயணிகள் பேருந்து! 7 இந்தியர்கள் நிலை குறித்து கவலை
காத்மண்டு: நேபாளத்தில் பயணிகள் பேருந்து ஆற்றில் கவிழ்ந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், நேபாளம் கடும் மழைப்பொழிவை எதிர்கொண்டிருக்கிறது. இந்நிலையில் இன்று அதிகாலை பெய்த கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் மண் சரிவு ஏற்பட்டிருக்கிறது. மதன்-ஆஷ்ரித் நெடுஞ்சாலையில் அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவில் 2 பயணிகள் பேருந்துகள் ஆற்றில் அடித்து செல்லப்பட்டிருக்கின்றன. இதில் 63 பேர் சிக்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், "இன்று அதிகாலையில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. இரண்டு பேருந்திலும் 63 பயணிகள் இருந்திருக்கின்றனர். பேருந்து திரிசூலி ஆற்றில் அடித்து செல்லப்பட்டிருக்கிறது. வானிலை மோசமாக இருப்பதால் மீட்புப் பணிகளில் தொடர்ந்து பின்னடைவு ஏற்பட்டு வருகிறது. இருப்பினும் எங்களுடைய முழு பலத்தை பயன்படுத்தி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறோம்" என்று பேரிடர் மீட்புப்படை அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

காத்மண்டு நோக்கி சென்ற பேருந்தும், காத்மண்டிலிருந்து ரவுதாஹட்டின் கவுர் நொக்கி சென்றிருந்த பேருந்தும் இந்த விபத்தில் சிக்கியுள்ளன. இந்த விபத்து நேபாள பிரதமர் புஷ்பா கமல் கவலை தெரிவித்திருக்கிறார். "நாராயண்காத் - முகிலின் சாலைப் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் பேருந்து அடித்துச் செல்லப்பட்டதில் சுமார் 63 பயணிகளைக் காணவில்லை என்கிற செய்தியை கேட்டு மிகுந்த வருத்தமடைகிறேன். விபத்தில் சிக்கியவர்களை மீட்க அனைத்து நடவடிக்கைகளையும் தீவிரமாக மேற்கொள்ள உத்தரவிட்டிருக்கிறேன்" என்று கூறியுள்ளார்.

வானிலை மோசமாக இருப்பதால் காத்மாண்டுவில் இருந்து சித்வானின் பரத்பூருக்குச் செல்லும் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. வானிலை இதே போன்று இருந்தால், மீட்பு பணிகள் மேலும் தமதமடையும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்நிலையில் இந்த விபத்தில் இந்தியர்கள் 7 பேர் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது விபத்தில் சிக்கிய பேருந்தில் 63 பயணிகள் இருந்திருக்கின்றனர். இதில் 7 பேர் இந்தியர்கள் என்று சொல்லப்படுகிறது. ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட பேருந்து தற்போது வரை மீட்கப்படாததால், இந்தியர்களின் நிலை என்ன ஆனது என்றும் தெரியவில்லை.












Click it and Unblock the Notifications