கடத்தல் தங்கபிஸ்கட்டுகள் வயிற்றுக்குள் சென்ற சோகம்: ஆபரேஷன் மூலம் அகற்றம்!
டெல்லி: டெல்லியில் வியாபாரி ஒருவர் ஆசனவாயில் வைத்து கடத்தி வந்த 12 தங்க பிஸ்கட்கள் வயிற்றுக்குள் சென்றதால், அவற்றை டாக்டர்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றினர். கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்த போலீசார் வியாபாரியை கைது செய்து வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
டெல்லி, சாந்தினி சவுக் பகுதியை சேர்ந்த 63 வயதான வியாபாரி ஒருவர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு சிங்கப்பூரில் இருந்து டெல்லி திரும்பினார். சிங்கப்பூரில் இருந்து ரூ.12 லட்சம் மதிப்புள்ள 396 கிராம் எடையுள்ள 12 தங்க பிஸ்கட்களை தனது ஆசன வாயில் வைத்து கடத்தி வந்திருந்தார்.
விமான நிலைய சோதனைகளின்போது அதிகாரிகளின் கண்களில் மண்ணை தூவிவிட்டு தப்பித்து வந்தபோதிலும், தங்க பிஸ்கட்கள் ஆசன வாயில் இருந்து குடலுக்குள் சென்று விட்டது.
அதன்பின், எந்த உணவையும் சாப்பிடாமல், திரவ ஆகாரம் மூலம் தங்க பிஸ்கட்களை வெளியே எடுக்க முயன்றார். எனினும், தங்க பிஸ்கட்கள் அவரது சிறுகுடலுக்குள் தங்கிவிட்டதால், அவருக்கு தொடர்ச்சியாக வலி ஏற்பட்டது.
ஒருகட்டத்தில் வலி தாங்க முடியாமல் போனதால் மருத்துவமனைக்கு சென்றார். டாக்டர்கள் பரிசோதனை செய்த பின், அறுவை சிகிச்சை செய்துதான் அகற்ற வேண்டும் என்று கூறினர்.
இதையடுத்து கடந்த 9 ஆம் தேதி டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்து வயிற்றில் இருந்து 12 தங்க பிஸ்கட்களையும் வெளியில் எடுத்தனர்.
இதுகுறித்து டெல்லி போலீசாருக்கும் சுங்கத் துறையினருக்கும் மருத்துவமனை நிர்வாகத்தினர் தகவல் தெரிவித்ததை தொடர்ந்து, அவர்கள் விரைந்து வந்து 12 தங்க பிஸ்கட்களையும் பறிமுதல் செய்தனர். அத்துடன் அவர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது.












Click it and Unblock the Notifications