”ஒவ்வொரு வாக்கும் முக்கியம்”- ஒரே ஒரு வேட்பாளருக்காக அகமதாபாத்தில் பூத் வைக்கும் தேர்தல் ஆணையம்
அகமதாபாத்: ஒரே ஒரு வாக்காளருக்காக ஓட்டுச்சாவடி அமைக்கப்பட்டுள்ள புதுமை அகமதாபாத்தில் நடக்க உள்ளது.
குஜராத் மாநிலத்தில் கிர் வனப் பகுதியில் சிங்கங்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. அந்த அடர்ந்த காட்டுக்குள் "பனெஜ்" என்ற இடத்தில் மிகப்பழமையான சிவன் கோவில் உள்ளது.
60 வயதை கடந்த "தர்ஷன்தாஸ்" என்பவர் அந்த சிவன் கோவிலின் பூசாரியாக உள்ளார். கோவில் வளாகத்தில் தங்கி இருக்கும் அவர் அந்த முகவரியில் ரேசன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை எல்லாம் எடுத்து வைத்துள்ளார்.
அவர் வசிக்கும் பகுதி அடர்ந்த காட்டுக்குள் சுமார் 35 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இதனால் அந்த காட்டுக்குள் இருக்கும் ஒரே ஒரு வேட்பாளராக தர்ஷன்தாஸ் உள்ளார்.
தேர்தல் கமிஷன் விதிப் படி ஒரு வாக்காளர் தன் வாக்கை பதிவு செய்ய 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு மேல் பயணம் செய்யக் கூடாது. அதற்கு ஏற்ப ஓட்டுச் சாவடிகள் அமைக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த விதியின் அடிப்படையில் சிவன் கோவில் பூசாரியான தர்ஷன்தாஸ் வாக்கை பதிவு செய்வதற்கு, ஒரே ஒரு ஓட்டுக்காக தனி வாக்குச்சாவடி அமைக்கப்படுகிறது. காட்டுக்குள் சிவன் கோவிலில் அந்த வாக்குச் சாவடி அமைக்கப்படும்.
கிர் வனப்பகுதி அடங்கியுள்ள பாராளுமன்ற தொகுதியில் வரும் 30 ஆம் தேதி ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. இதற்காக 29 ஆம் தேதி மாலை தேர்தல் அதிகாரிகள் 5 பேர் காரில் காட்டுக்குள் செல்வார்கள்.
அவர்கள் தங்களுடன் வாக்குச் சீட்டு, மின்னணு எந்திரம், அழியாத மை மற்றும் தேவையான பொருட்களை எடுத்து செல்வார்கள். 30 ஆம் தேதி காலை அவர்கள் தர்ஷன்தாஸ் வாக்கை பதிவு செய்வார்கள்.
5 நிமிடங்களில் அந்த ஓட்டுப்பதிவு முடிந்து விடும். அதன் பிறகு அதிகாரிகள் காட்டுக்குள் இருந்து வெளியில் வருவார்கள். இந்தியாவில் ஒரே ஒரு வாக்காளருக்காக அமைக்கப்படும் வாக்குச்சாவடியாக இது இருக்கும்.
இந்த ஒரு வாக்காளரின் வாக்கை பெற தேர்தல் கமிஷன் பல ஆயிரம் ரூபாயை செலவு செய்கிறது. இதனால் தர்ஷன்தாசில் வாக்கு "விலை மதிப்பில்லாதது" என்று வர்ணிக்கப்படுகிறது.
கடந்த 2004, 2009 ஆம் ஆண்டு தேர்தல்களிலும் தர்ஷன்தாஸ் வாக்கை பெற அதிகாரிகள் சுமார் 35 கிலோ மீட்டர் தூரம் காட்டுக்குள் சென்று வந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications