ஆதார் எண் இனி கட்டாயம்: மக்களவையில் நிறைவேறியது ஆதார் மசோதா
டெல்லி: எதிர்க்கட்சிகளின் கடும் ஆட்சேபனைக்கு மத்தியில் ஆதார் எண்ணை கட்டாயமாக்கும் மசோதா மக்களவையில் இன்று நிறைவேறியது.
ஆதார் அட்டைக்கு சட்ட அந்தஸ்து வழங்கும் நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டு வருவதாக பட்ஜெட் உரையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தபோது நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்திருந்தார். இந்நிலையில்,ஆதார் எண்ணை கட்டாயமாக்கும் மசோதாவை நிதியமைச்சர் அருண் ஜெட்லி மக்களவையில் இன்று தாக்கல் செய்தார்.

மசோதாவை ஆதரித்து பேசிய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது 2010ம் ஆண்டு டிசம்பர் மாதம் பாராளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த மசோதா மீது 7 ஆண்டுகளாக நடந்த விவாதம் தற்போது உச்சகட்டத்தை அடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
மேலும், மானியத்துக்காக செலவிடப்படும் அரசுப் பணத்தை கையாள்வதில் கவனம் செலுத்துவதே இந்த மசோதாவின் நோக்கம் என்பதால் இது பண மசோதா என்றும் அவர் அறிவித்தார்.
உண்மையான பயனாளிகளுக்கு மானியம் சென்று சேர இந்த மசோதா உதவும். இதன் மூலம் ஏராளமான பணத்தை சேமிக்க முடியும். உதாரணமாக, சமையல் எரிவாயு மானியத்தை ஆதார் எண் மூலம் அனுப்பிய வகையில் அரசுக்கு 15000 கோடி ரூபாய்க்கு மேல் மிச்சமாகியிருக்கிறது.
நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 97 சதவீதம் பேர் ஆதார் எண் பெற்றுள்ளனர். இதுபோல் 67 சதவீத மைனர்கள் ஆதார் பெற்றுள்ளனர். ஒவ்வொரு நாளும் 5 முதல் 7 லட்சம் பேர் ஆதார் எண் பெறுகின்றனர் என்றும் ஜெட்லி தெரிவித்தார்.
இது தொடர்பாக பிஜு ஜனதா தளம் உறுப்பினர் பி.மஹதாப் பேசும்போது, "இந்த மசோதா தற்போதைய வடிவில் சட்டமானால் ஒருவரின் தனிப்பட்ட உரிமைகள் பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது. எனவே இம் மசோதாவை நிலைக்குழுவின் ஆய்வுக்கு அனுப்ப வேண்டும்" என்றார்.
இதற்கு காங்கிரஸ் உறுப்பினர் மல்லிகார்ஜுன கார்கே, அதிமுக உறுப்பினர் பி.வேணுகோபால் ஆகியோர் ஆதரவு தெரிவித்தனர். கார்கே கூறும்போது, "ஆதார் மசோதாவை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால் இதில் குறைபாடுகள் உள்ளன" என்றார்.
எதிர்க்கட்சிகளின் இந்த கோரிக்கைக்கு மத்தியிலும் மக்களவையில் பா.ஜ.க. தலைமையிலான அரசுக்கு போதிய பெரும்பான்மை இருப்பதால் இந்த மசோதா பண மசோதாவாக எளிதாக நிறைவேற்றப்பட்டது.












Click it and Unblock the Notifications