'ஸ்பெக்ட்ரம்' புதிய தொலைபேசி டேப்- விவாதிக்க அனுமதி கோரி ராஜ்யசபாவில் அதிமுக நோட்டீஸ்

ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் ஏற்கெனவே நீரா ராடியாவின் தொலைபேசி உரையாடல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. இந்த நிலையில் கலைஞர் டிவி நிர்வாகியாக இருந்த சரத் ரெட்டி, காவல்துறை அதிகாரி ஜாபர்சேட், திமுக தலைவர் கருணாநிதியின் உதவியாளர் சண்முகசுந்தரம் உள்ளிட்டோர் ஸ்பெக்ட்ரம் வழக்கு தொடர்பாக பேசிய புதிய தொலைபேசி உரையாடல்கள் வெளியாகி உள்ளன.
இதில் ஸ்பெக்ட்ரம் வழக்கில் இருந்து தப்பிக்க ஆவணங்களை மாற்றியமைத்தது, கலைஞர் டிவிக்கு பணப் பரிமாற்றம் நடந்தது உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் பதிவாகி இருக்கின்றன.
இது திமுக தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழியை காப்பாற்றும் நடவடிக்கை என தொலைபேசி உரையாடல்களை வெளியிட்ட ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் பிரசாந்த் பூஷன் தெரிவித்திருந்தார். ஆனால் இந்த தொலைபேசி உரையாடல்களே பொய் என திமுக தலைவர் கருணாநிதி மறுத்திருந்தார்.
இந்நிலையில் நாடாளுமன்றத்தின் இறுதி கூட்டத் தொடரின் முதல் நாளான இன்று ராஜ்யசபாவில் இது பற்றி விவாதிக்க அனுமதி கோரி அதிமுக உறுப்பினர் மைத்ரேயன் நோட்டீஸ் கொடுத்துள்ளார்.
ராஜ்யசபாவில் கேள்வி நேரத்தை ஒத்திவைத்து விட்டு, இது குறித்து விவாதிக்க வேண்டும் என்று தமது கடிதத்தில் மைத்ரேயன் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவது குறித்தும் விவாதிக்கவும் அவர் நோட்டீஸ் கொடுத்துள்ளார்.


Click it and Unblock the Notifications
