தமிழக மீனவர் பிரச்சனை- லோக்சபாவில் அதிமுக ஒத்திவைப்பு தீர்மானம்

லோக்சபாவில் நேற்று இதுகுறித்து அ.தி.மு.க. அவைத் தலைவர் தம்பிதுரை பேசியதாவது:
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தொடர்ந்து தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது. இலங்கையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கை சிறைகளில் காரணம் ஏதுமின்றி விசாரணை இன்றி வாடுகின்றனர். அவர்களுடைய படகுகளும் இலங்கை அரசால் கைப்பற்றப்பட்டு தங்களுடைய வாழ்வாதாரங்களை இழந்து நிற்கின்றனர். இதனால் அந்த மீனவர்களின் குடும்பங்கள் கடுந்துயருக்கும் மன உளைச்சலுக்கும் ஆளாகின்றனர்.
மீனவர்கள் படும் இத்துயரம் மீனவர் சமுதாயம் மட்டுமின்றி தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களின் மனங்களில் கொந்தளிப்பை ஏற்படுத்துகிறது.
இதுகுறித்து தமிழக முதல்-அமைச்சர் பல கடிதங்களை இந்திய பிரதமருக்கு எழுதியிருக்கிறார். உலக மீனவர் தினமான நவம்பர் 21-ம் தேதியன்று இலங்கை ராணுவம் புதுக்கோட்டையை சேர்ந்த 20 ஏழை மீனவர்கள் இந்திய எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது சிறைபிடித்து அவர்களின் படகுகளையும் கைப்பற்றி வைத்திருக்கிறது.
இதுபோன்ற சம்பவங்கள் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன. தமிழக மீனவர்களும் பொதுமக்களும் இந்திய அரசு தங்களை வஞ்சித்து விட்டதாக உணருகிறார்கள். எனவே நம்முடைய பிரதமர் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் உடனடியாக தலையிட்டு இலங்கை சிறையில் வாடும் 80 மீனவர்களையும், அவர்களின் 47 படகுகளையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோருகிறேன்.
இவ்வாறு தம்பிதுரை தன்னுடைய ஒத்திவைப்பு தீர்மானத்தில் குறிப்பிட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications