மதுரைக்கு பின்னாடி.. தேர்தலுக்கு முன்னாடி! குஜராத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையை திறந்து வைக்கிறார் மோடி
அகமதாபாத்: குஜராத்தின் முதல் எய்ம்ஸ் மருத்துவமனையை வரும் 25ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார். மதுரைக்கு பின்னர்தான் குஜராத்தில் எய்ம்ஸ் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது.
இந்தியாவின் தரம் வாய்ந்த மருத்துவமனைகளில் முக்கியமானதாக எய்ம்ஸ் கருதப்படுகிறது. தற்போது தேர்தல் நெருங்கும் நிலையில், நாடு முழுவதும் புதிய எய்ம்ஸ் மருத்துவமனைகளை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க இருக்கிறார். அந்த வகையில் வரும் 25ம் தேதி குஜராத் மாநிலத்தில் ராஜ்கோட்டில் எய்ம்ஸ் மருத்துவமனையை திறந்து வைக்கிறார். இது குஜராத் மாநிலத்திற்கான முதல் எய்ம்ஸ் மருத்துவமனையாகும்.

25ம் தேதி குஜராத் வரும் பிரதமர் மோடி, தேவபூமி துவாரகா மாவட்டத்தில் ஓகா மற்றும் பெய்ட் துவாரகா இடையே நான்கு வழி கேபிள்-தடுப்பு பாலத்தை திறந்து வைக்கிறார். இது குறித்து காந்தி நகரில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் படேல்,
“201 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து கிடக்கும் ராஜ்கோட் எய்ம்ஸ் மருத்துவமனையானது 720 படுக்கைகள் கொண்ட உலகத் தரம் வாய்ந்த மருத்துவமனையாகும். இதில் ICU மற்றும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி படுக்கைகள் உள்ளன. வரும் 25ம் தேதியன்று, 23 ஆபரேஷன் தியேட்டர்கள், 30 படுக்கைகள் கொண்ட ஆயுஷ் பிளாக் மற்றும் 250 படுக்கைகள் கொண்ட சிறப்பு பிரிவை பிரதமர் திறந்து வைக்கிறார். இந்த மருத்துவமனைக்கு தற்போது வரை ரூ.1,195 கோடி செலவிடப்பட்டுள்ளது.
தற்போதுவரை 1.44 லட்சம் நோயாளிகளுக்கு OPD சேவை வழங்கப்பட்டிருக்கிறது. 25ம் தேதி மதியம் மருத்துவமனையை திறந்து வைக்கும் பிரதமர் மோடி, அன்று மாலை ராஜ்கோட் ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறார். முன்னதாக பழைய விமானநிலையத்தில் இருந்து பொதுக்கூட்டம் நடைபெறும் இடம் வரை ஒரு கிலோமீட்டர் தொலைவுக்கு அவர் ரோடு ஷோவில் ஈடுபடுகிறார்.
இந்த விழாவின் போது, மங்களகிரி (ஆந்திரப் பிரதேசம்), பதிண்டா (பஞ்சாப்), ரேபரேலி (உத்தரப் பிரதேசம்), கல்யாணி (மேற்கு வங்கம்) ஆகிய இடங்களில் புதிதாகக் கட்டப்பட்ட மற்ற நான்கு எய்ம்ஸ் மருத்துவமனைகளையும் மோடி திறந்து வைக்கிறார். இது தவிர குஜராத்திற்கு ரூ.35,700 கோடி மதிப்பிலான திட்டங்களையும் தொடங்கி வைக்கிறார்” என்று கூறியுள்ளார்.
பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ள குஜராத் ராஜ்கோட் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டியிருந்தார். இதனையடுத்து 3 ஆண்டுகளில் மருத்துவமனை திறக்கப்படுகிறது. ஆனால், கடந்த 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டியும், சுற்று சுவரை தவிர வேறு எதையும் மத்திய அரசு கட்டவில்லை என்று நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications