அட கடவுளே! ஒடிசா ரயில் விபத்தில் காயமடைந்தவர்கள் பயணித்த பஸ் விபத்து.. வேன் மோதியது.. ஷாக் தகவல்
புவனேஸ்வர்: ஒடிசாவில் நடந்த பயங்கர ரயில் விபத்தில் சிக்கி 290க்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். இந்த சோக வடு மறைவதற்குள் ரயில் விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு கொல்கத்தா அழைத்து சென்ற பஸ்விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா அருகே ஷாலிமாரில் இருந்து சென்னைக்கு கோரமண்டல் விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. வழக்கம்போல் இந்த ரயில் நேற்று முன்தினம் ஷாலிமாரில் இருந்து சென்னைக்கு புறப்பட்டது.

இந்த ரயில் ஒடிசா மாநிலம் பாலாசூர் மாவட்டத்தில் தடம்புரண்டது. சரக்கு ரயில் மீது மோதியதில் அந்த ரயில் தடம் புரண்டது. மேலும் கோரமண்டல் விரைவு ரயில் பெட்டிகள் அருகே உள்ள தண்டவாளத்தில் விழுந்தது.அப்போது அதில் வந்த யஷ்வந்த்பூர்-ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலும் தடம்புரண்டது.
இந்த ரயில் விபத்துகள் இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. இந்த விபத்தில் பலி எண்ணிக்கை 290ஐ தாண்டி 300ஐ நெருங்குகிறது. ரயில் விபத்துக்கான சரியான காரணம் பற்றி தீவிர விசாரணை நடந்து வருகிறது. இதற்கிடையே தான் விபத்துக்கான மூலக்காரணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இன்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே தான் தற்போது திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. அதாவது ரயில் விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பி வருகின்றனர். அந்த வகையில் ரயில் விபத்தில் 30க்கும் அதிகமான மேற்கு வங்க மக்கள் இறந்த நிலையில் ஏராளமானவர்கள் காயமடைந்தனர். இவர்களும் சிகிச்சை பெற்ற பிறகு மேற்கு வங்க மாநிலத்துக்கு புறப்பட்டனர். பாலசோரில் இருந்து காயமடைந்த பயணிகளுடன் பஸ் ஒன்று கொல்கத்தா நோக்கி புறப்பட்டு சென்று கொண்டிருந்தது.
அப்போது மெடினிபூர் என்ற இடத்தில் சென்ற அந்த பஸ்சும், வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் ரயில் விபத்தில் சிக்கி காயமடைந்து பஸ்சில் பயணித்தவர்கள் லேசான காயம் முதல் படுகாயமடைந்தனர். இதையடுத்து உடனடியாக அவர்கள் அனைவரும் அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
ஒடிசாவில் பயங்கரமாக நடந்த ரயில் விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய இந்த பயணிகள் சொந்த ஊர் திரும்பியபோது நடந்த இந்த விபத்து தற்போது கூடுதல் அதிர்ச்சியை ஏறு்படுத்தி உள்ளது. மேலும் இதுதொடர்பான செய்திகள் வெளியான நிலையில் இவர்கள் அனைவரும் விரைவில் குணமாக வேண்டும் என மக்கள் பிரார்த்தனை செய்ய தொடங்கி உள்ளனர்.












Click it and Unblock the Notifications