நொடியில் விழுந்த விமானம்..நொறுங்கிய கனவுகள்! குஜராத் விமான விபத்து..உதவி எண்களை அறிவித்த ஏர் இந்தியா
அகமதாபாத்: குஜராத்தின் அகமதாபாத்திலிருந்து லண்டனுக்குச் சென்ற ஏர் இந்தியாவுக்கு சொந்தமான ஏஐ 171 விமானம் புறப்படுதலின் போது விபத்துக்குள்ளானதாக ஏர் இந்தியா அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. விமானத்தில் 242 பயணிகளும் விமான பணியாளர்களும் விபத்தில் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படும் நிலையில், அவசர உதவி எண்ணை அறிவித்துள்ளது ஏர் இந்தியா. மேலும் மீடியா தொடர்பான சந்தேகங்களை கேட்கவும் தனியாக எண்ணை அறிவித்துள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா நிறுவனத்திற்கு சொந்தமான ஏஐ 171 - போயிங் 787 - 8 ட்ரீம் லைனர் வகையைச் சேர்ந்த விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளானது.
சுமார் ஒன்றரை மணி அளவில் இந்த விபத்து ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இதில் இரண்டு விமானிகள் 10 விமான ஊழியர்கள் உள்ளிட்ட 242 பேர் பயணித்ததாக கூறப்படுகிறது. புறப்பட்ட சில நிமிடங்களில் விமானம் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் மேதானி நகர் குடியிருப்பு பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது.

விமானம் விழுந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் விமானம் தாழ்வாக பறந்து குடியிருப்பு பகுதியில் விழுந்தவுடன் மிகப்பெரிய அளவு வெடித்த சத்தத்துடனும் தீ பிளம்புடனும் விமானம் விபத்துக்குள்ளானது. தொடர்ந்து அப்பொழுது முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. விபத்து குறித்து தகவல் அறிந்து சென்ற தீயணைப்பத்துறையினர் சம்பவ இடத்தில் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் விமான நிலைய தீயணைப்புத் துறையினர் அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். மீட்புபணிகளுக்காக தேசிய பேரிடர் மீட்பு படையும் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளது. தற்போது தீயை அணைக்கும் பணியோடு காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.
அகமதாபாத் விமான நிலையத்தில் விமான சேவைகள் நிறுத்தப்பட்டு இருக்கும் நிலையில் பயணிகள் குறித்த தகவல்களும் வெளியாகி உள்ளது. விபத்தில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபாணி பயணித்ததாகவும் ஏராளமான வெளிநாட்டு பயணிகளும் விபத்தில் சிக்கி இருக்கலாம் என சொல்லப்படுகிறது. லண்டன் செல்லும் விமானம் என்பதால் விமானத்தில் முழுமையாக எரிபொருள் நிரப்பப்பட்டிருந்தது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
விபத்து குறித்து தகவல் அறிந்தவுடன் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு அகமதாபாத் விரைந்து இருக்கிறார். மேலும் பிரதமர் நரேந்திர மோடி விபத்து தொடர்பாக மத்திய அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோருடன் பேசியதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் பயணிகள் விபரங்களை தெரிந்து கொள்வதற்காக ஏர் இந்தியா உதவி எண்களை அறிவித்திருக்கிறது.
இது தொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்," ஏஐ 171 அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு சென்றபோது, புறப்பாட்டின் போது விபத்துக்குள்ளானது. நண்பகல் 1:38 மணிக்கு விமான பணியாளர்கள் மற்றும் 242 பயணிகளுடன் புறப்பட்டபோது விபத்துக்குள்ளானது. போயிங் 787 - 8 ட்ரீம் லைனர் வகையைச் சேர்ந்த இந்த விமானத்தில் 169 இந்திய பயணிகளும், 53 இங்கிலாந்து பயணிகளும், போர்த்துக்கீஸு நாட்டைச் சேர்ந்த ஏழு பேரும், ஒரு கனடா நாட்டைச் சேர்ந்த பயணியும் பயணித்தனர்.
விபத்தில் காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் பயணிகளுக்காக அவசரகால உதவி எண் கொடுக்கப்பட்டுள்ளது. 1800 5691 444 என்று எண்ணில் பயணிகள் தொடர்பு கொள்ளலாம். இந்த விபத்து தொடர்பாக ஏர் இந்தியா, அதிகாரிகளுக்கும், விசாரணைக்கும் முழு ஒத்துழைப்பு கொடுக்கும்.
விபத்து தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் ஏர் இந்தியாவின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் எக்ஸ் பக்கத்திலும் வெளியிடப்படும். இந்த அவசர உதவி எண்ணுக்கு பத்திரிக்கையாளர்கள் தொடர்பு கொண்டு பேச வேண்டாம். அவர்களுக்கு என்று தனியாக 9821414954 என்ற ஏர் இந்தியா மீடியா தொடர்பு எண்ணும் கொடுக்கப்பட்டிருக்கிறது" எனக் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications