என் பெயர் ஐஸ்வர்யா ராய்.. நான் சரப்ஜித் சிங்கின் "தங்கை"!
மும்பை: பாலிவுட் ரொம்ப மாறி வருகிறது. குண்டக்க மண்டக்க படம் எடுத்த காலம் போய் இப்போது பார்த்து ரசிக்கும்படியான படங்களுக்கு மாறி வருகிறார்கள் பாலிவுட்டினர். சமீப காலமாக வாழ்க்கை வரலாறுகளைப் படமாக்கி வரும் பாலிவுட்டில் லேட்டஸ்டாக இணைகிறது சரப்ஜித் சிங்கின் வாழ்க்கை வரலாறு.
இந்தியரான சரப்ஜித் சிங் பாகிஸ்தானியர்களால் 1990ல் சிறைபிடிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டவர். இவரை மீட்க இந்தியாவிலிருந்து கடுமையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக 2013ம் ஆண்டு மே 2ம் தான் அடைக்கப்பட்டிருந்த சிறையில் பாகிஸ்தானிய கைதிகளால் சரமாரியாக தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார் சரப்ஜித் சிங்.
இவரது வாழ்க்கையை ஓமுங் குமார் என்பவர் படமாக்கவுள்ளார். அதில்தான் ஐஸ்வர்யா ராய் நடிக்கவுள்ளார்.

ஜஸ்பா நாயகி
நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடித்து வருகிறார் ஐஸ்வர்யா ராய். சமீபத்தில்தான் அவரது ஜஸ்பா படத்தின் ஷூட்டிங் முடிந்தது. அடுத்து கரண் ஜோகர், சுஜாய் கோஷ் ஆகியோரது படங்களில் நடிக்கவுள்ளார்.

சரப்ஜித் சிங்
அடுத்து சரப்ஜித் சிங்கின் வாழ்க்கை வரலாறு படத்துக்கு வருகிறார் ஐஸ்வர்யா ராய். இப்படத்தில் தனது சகோதரனை மீட்கப் போராடிய சரப்ஜித்தின் தங்கை வேடத்தில் நடிக்கவுள்ளார் ஐஸ்வர்யா.

தல்பீர் கவுர்
சரப்ஜித் சிங் சிறையில் அடைபட்டிருந்தபோது அவரை மீட்கும் போராட்டத்தை அவரது தங்கை தல்பீர் கவுர்தான் முன்னெடுத்து வந்தார். தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்கிரிப்ட் ரெடி
இதுகுறித்து ஓமுங் குமார் கூறுகையில், உண்மைதான். சரப்ஜித் சிங் படத்தை இயக்குவதோடு, தயாரிக்கவும் உள்ளேன். கதையின் ஸ்கிரிப்ட் கூட ரெடியாகி விட்டது என்றார்.

மேரி கோம் படத்தை இயக்கியவர்
ஏற்கனவே மேரி கோம் வாழ்க்கை வரலாற்றுப் படத்தை இயக்கியவர் இந்த ஓமுங் குமார். தற்போது சரப்ஜித் சிங்கின் வாழ்க்கை வரலாற்றைக் கையில் எடுக்கிறார் இவர்.

ஐஸ்வர்யாவுக்கு முக்கியத்துவம்
இந்தப் படம் சரப்ஜித் சிங்கின் வாழ்க்கை வரலாறுதான் என்றாலும் கூட தனது சகோதரின் கதையை தல்பீர் கவுர் கூறுவது போல இந்தப் படம் அமைந்திருக்குமாம். அவரது பார்வையோட்டத்தில் கதையோட்டம் இருக்குமாம்.

அழுது விட்டார் ஐஸ்வர்யா
ஓமுங் குமார் மேலும் கூறுகையில், நான் சரப்ஜித் சிங்கின் கதையை ஐஸ்வர்யாவிடம் கூறியபோது உணர்ச்சிவசப்பட்டு அவர் அழுது விட்டார். இந்தப் படத்தில் நிச்சயம் நான் நடிக்கிறேன் என்றும் கூறி விட்டார் என்றார்.

தங்கை சம்மதம்
சரப்ஜித்தின் வாழ்க்கையைப் படமாக்க அவரது தங்கை தல்பீர் கவுரும் சம்மதம் கொடுத்து விட்டாராம். இதையடுத்து அக்டோபர் முதல் வாரத்தில் படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறப்படுகிறது. பஞ்சாபில் வைத்து படத்தை முழுமையாக எடுக்கவுள்ளனர்.












Click it and Unblock the Notifications