280 பேரை பலி கொண்ட கோர ரயில் விபத்து..பாஜக நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து..ஜே.பி. நட்டா அறிவிப்பு
புவனேஸ்வர்: ஒடிசா ரயில் விபத்து காரணமாக நாடு முழுவதும் பாஜகவின் அனைத்து நிகழ்ச்சிகளும், இன்று ரத்து செய்யப்படுவதாக பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அறிவித்துள்ளார். கோரமண்டல் ரயில், பெங்களூர் ஹவுரா ரயில் சரக்கு ரயில் மோதி தடம் புரண்ட விபத்தில் 280க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 900த்திற்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஓடிசா மாநிலம் பல்சோர் மாவட்டம் பாஹாநாகா ரயில் நிலையம் அருகே நேற்று மாலை கோர ரயில் விபத்து நிகழ்ந்துள்ளது. சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டது. இந்த ரயிலின் B2 முதல் B9 வரை உள்ள பெட்டிகள் மற்றும், A1, A2 பெட்டிகள் என 10 பெட்டிகள் மொத்தமாக தடம்புரண்டு எதிர் தண்டவாளத்தில் கவிழ்ந்தது

கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில் என இரண்டு ரயில்களும் ஒரே பாதையில் வந்ததால், நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று ரயில்வே தரப்பில் சொல்லப்படுகிறது. இரண்டு ரயில்களும் ஒரே பாதையில் வந்தது எப்படி என்பது தொடர்பான விசாரணையை ரயில்வே தொடங்கியுள்ளது.
இந்த இரண்டு ரயில்களும் விபத்துக்குள்ளான நிலையில் யஸ்வந்த்பூரில் இருந்து ஹவுரா செல்லும் மற்றொரு ரயிலும் மூன்றாவது ரயிலாக அங்கு விபத்துக்குள்ளானது. யஷ்வந்த்பூர்-ஹவுரா அதிவிரைவு ரயில், கோரமண்டல் எக்ஸ்பிரஸின் சில பெட்டிகளின் தடம் புரண்ட பெட்டிகளில் மோதி விபத்துக்குள்ளாகி எதிர் பாதையில் விழுந்ததாக ரயில்வே அமைச்சக செய்தித் தொடர்பாளர் அமிதாப் சர்மா தெரிவித்துள்ளார்.
இந்த கோர விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் விடிய விடிய நடைபெற்றன. இதுவரை 280 பேர் வரை உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 900க்கும் அதிகமானோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஓடிசா மாநிலத்தில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். பயணிகளின் உறவினர்கள் அனைவரும் அச்சமடைந்துள்ளனர்.

மூன்று ரயில்கள் மோதி விபத்து நிகழ்ந்துள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. இந்நிலையில் ஒடிசா ரயில் விபத்து காரணமாக நாடு முழுவதும் பாஜகவின் அனைத்து நிகழ்ச்சிகளும், இன்று ரத்து செய்யப்படுவதாக பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அறிவித்துள்ளார். கோவா மாநிலத்தில் இன்று துவக்கப்பட இருந்த வந்தே பாரத் ரயில் திட்ட அறிமுக நிகழ்ச்சியும் ரத்து செய்யப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி இன்று வந்தே பாரத் ரயிலை கொடியசைத்து துவங்கி வைக்க இருந்தார். ஆனால் ஒடிசா மாநில ரயில் விபத்து காரணமாக நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.
ரயில் விபத்தில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஓடிசா மாநில அரசு ஒருநாள் துக்கம் அனுசரிக்கிறது அனைத்து அரசு நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதே போல தமிழ்நாடு அரசும் இன்றைய தினம் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கருணாநிதி பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாட இருந்த நிலையில் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுவதாக முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் விபத்துக்குள்ளானவர்களை பற்றிய தகவல்களை அறிய, 044 28593990, 9445869843 என்ற அவசர உதவி எண்களை தொடர்பு கொண்டு தகவல்களை பெறலாம் என தமிழ்நாடு மீட்புக்குழு அறிவித்துள்ளது. மேலும் இந்த விபத்து குறித்து பதுச்சேரி அரசு சார்பில் 1070, 1077, 0413-2251003, 2255996 என்ற உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications