வீட்டை விட்டு ஓடி போய் திருமணம் செய்து கொண்ட தம்பதி! போலீஸ் பாதுகாப்பு கேட்க உரிமை இல்லை- ஹைகோர்ட்
அலகாபாத்: பெற்றோரின் சம்மதமில்லாமல் திருமணம் செய்து கொள்ளும் தம்பதி போலீஸ் பாதுகாப்பை உரிமையாக கோர முடியாது என உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அலகாபாத் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அதாவது அந்த தம்பதியின் உயிருக்கோ சுதந்திரத்திற்கோ ஆபத்து ஏற்படாதவரை அவர்கள் பாதுகாப்பு கோர முடியாது என தெரிவித்துள்ளது. இந்த கருத்தை நீதிபதி சவுரவ் ஸ்ரீவத்சவா தெரிவித்திருந்தார்.

ஷ்ரேயா கேசர்வாணி என்பவர் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் இந்த காதலுக்கு இருவரின் பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருதரப்பினருமே இந்த கல்யாண பந்தத்தை விட்டுவிட்டு தங்களுடன் வந்துவிடுமாறு கோரி வருகிறார்களாம்.
இது தொடர்பாக தனக்கும் தனது கணவருக்கும் போலீஸார் பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்றும் தங்களது திருமண வாழ்க்கையில் தங்கள் இருவரது குடும்பத்தினரும் தலையிடக் கூடாது என உத்தரவு பிறப்பிக்குமாறு அலகாபாத் நீதிமன்றத்தை நாடினர்.
இந்த வழக்கு நீதிபதி சவுரவ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி கூறுகையில் புகார்தாரர்களின் உயிருக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை. உறவினர்கள் யாராவது அச்சுறுத்தியதாகவோ தாக்குதல் நடத்த முயற்சித்ததாகவோ ஒரு ஆதாரத்தையும் அவர்கள் சமர்ப்பிக்கவில்லை.
அது போல் தங்கள் குடும்பத்தினரால் தங்களுக்கு மிரட்டல் இருப்பதாக தம்பதி எந்த காவல் நிலையத்திலும் புகார் அளிக்கவில்லை. அப்படியிருக்கும்பட்சத்தில் அவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என உரிமையாக கேட்க முடியாது.
உச்சநீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்புகளில், வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொள்ளும் தம்பதிக்கு பாதுகாப்பு அளிப்பது நீதிமன்றத்தின் வேலை இல்லை என தெரிவிக்கப்பட்டது. அதையேதான் நானும் சொல்கிறேன். பெற்றோரின் விருப்பம் இல்லாமல் திருமணம் செய்து கொள்ளும் எல்லோருக்கும் போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட முடியாது.
அவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் இல்லாதவரை இந்த உத்தரவை பிறப்பிக்க முடியாது. இதை உரிமையாகவும் அவர்கள் கோர முடியாது. இந்த சமூக பிரச்சினைகளை எப்படி சமாளிப்பது என்பது குறித்து தம்பதிகள் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருந்து கற்றுக் கொள்ளுமாறு நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
இதே போன்ற இன்னொரு வழக்கில் கடந்த 4 ஆம் தேதி வெளியான தீர்ப்பில் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டவர்களின் உயிருக்கு அச்சுறுத்தலோ அவர்கள் மீது தாக்குதலோ நடக்கும் பட்சத்தில் போலீஸார் தலையிட்டு அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். இது போல் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது என்பதற்கான ஆதாரத்தை அவர்கள் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications