For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கடலூரில் இருளர் பழங்குடி தாய், சேயை காப்பாற்றிய 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் - வழியிலேயே பிரசவம்

By BBC News தமிழ்
|
தாயும் சேயும் தற்போது நலமாக இருக்கிறார்கள்.
BBC
தாயும் சேயும் தற்போது நலமாக இருக்கிறார்கள்.

பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணியை மருத்துவமனைக்கு கொண்டுசெல்ல நேரம் இல்லாததால் 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் பிரசவம் பார்த்த நடந்த நெகிழ்ச்சியான சம்பவம் கடலூரில் நிகழ்ந்துள்ளது.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே அகரம் கிராமம் இருளர் பழங்குடி இன மக்களில் ஒருவரான சக்திவேல் என்பவரது மனைவி முத்துலட்சுமி. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த முத்துலட்சுமிக்கு வியாழனன்று பகல் 12 மணியளவில் பிரசவ வலி ஏற்பட்டது.

அப்பொழுது வீட்டில் இருந்தவர்கள் அனைவரும் வேலைக்கு சென்றுவிட்டதால், முத்துலட்சுமியின் வீட்டின் அருகாமையிலிருந்த அக்கம் பக்கத்தினர் 108 ஆம்புலன்ஸை உதவிக்கு அழைத்தனர். முத்துலட்சுமியின் வீட்டின் அருகே போதிய சாலை வசதி இல்லாத காரணத்தினால் மேற்கொண்டு ஆம்புலன்ஸ் ஊர்தியை உள்ளே கொண்டுசெல்ல முடியாமல் போனது.

இதையடுத்து மருத்துவ உதவியாளர் சௌந்தரராஜன் மற்றும் ஓட்டுநர் சிவக்குமார் இருவரும் ஸ்டெச்சர் மூலமாக முத்துலட்சுமியை அழைத்துவர முடிவு செய்தனர். ஆனால் பிரசவ வலியால் முடியாமல் இருந்த முத்துலட்சுமிக்கு குழந்தை வெளியே வர தொடங்கியது. இதையடுத்து மருத்துவ உதவியாளர் சௌந்தரராஜன் ஓட்டுநர் சிவக்குமார் உதவியுடன் முத்துலட்சுமியை பாதுகாப்பாக வைத்து, சேலை மூலமாக திரை அமைத்து அவருக்கு பிரசவம் பர்க்க தொடங்கினார்.

குழந்தை பெற்ற பிறகு தாய் மற்றும் குழந்தைக்கு செய்ய வேண்டிய தேவையான மருத்துவ உதவிகள் அனைத்தும் செய்தார். பின்னர் தாய் முத்துலட்சுமி மற்றும் குழந்தை இருவரையும் மருத்துவனைக்கு அழைத்து சென்று அனுமதித்தார். இதில் முத்துலட்சுமிக்கு பெண் குழந்தை பிறந்தது. தற்போது தாய் மற்றும் குழந்தை இருவருமே பாதுப்பாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கின்றனர்.

இதுகுறித்து முத்துலட்சுமி கணவர் சக்திவேல் கூறுகையில், "நான் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருகிறேன். இந்த நிகழ்வு நடந்த அன்று ஆதார்‌ அட்டை திருத்தம் செய்வதற்காக திட்டக்குடி சென்றிருந்தேன். அப்போது தொலைபேசி மூலமாக வயிறு வலி ஏற்பட்டதை என் மனைவி தெரிவித்தார். நான் வருவதற்கு தாமதம் ஆகவே அருகில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் அழைத்துள்ளனர். அப்போது சரியான நேரத்தில் வந்த அந்த 108 ஆம்புலன்ஸ் மருத்துவ பணியாளர் கடவுள் போல எனது மனைவி மற்றும் குழந்தை காப்பாற்றி சென்றுள்ளனர். "

108 ஆம்புலன்ஸ் ஊழியர்
BBC
108 ஆம்புலன்ஸ் ஊழியர்

"அது மட்டும்தான் என்னால் கூற இயலும். அந்த சூழலில் யாரும் உதவி செய்ய யோசிப்பார்கள்.‌ மேலும் வாகனம் கிராமத்திற்குள் வரத் தாமதம் ஆகும். ஆனால் அவர்கள் எங்கு இருந்தார்களோ எங்களுக்காக வந்து மனைவியை பிரசவம் பார்த்து இருவரையும் நல்லபடியாக காப்பாற்றினார்கள். இதனால் நாங்கள் மன நிறைவுடன் மகிழ்ச்சியாக இருக்கிறோம்," என்று சக்திவேல் பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.

மிகத் துரிதமாக செயல்பட்டு சம்பவ இடத்திற்கு விரைவாக சென்ற ஓட்டுநர் சிவகுமார் மற்றும் பிரசவம் பார்த்த மருத்துவ உதவியாளர் சௌந்தரராஜனை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

ஆம்புலன்சில் ஏற்ற முயற்சித்தபோது...

பிரசவம் பார்த்த 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளரான 23 வயது சௌந்தரராஜனை பிபிசி தமிழ் தொடர்பு கொண்டு பேசியது. அப்போது பேசிய அவர், "எங்களுக்கு தகவல் கிடைத்ததும் உடனடியாக சென்று பார்த்தபோது பிரசவ வலியால் இருந்த பெண்மணி, ரொம்பவும் முடியாமல் வீட்டின் அருகே இருந்த தோட்டத்தில் உட்கார்ந்து விட்டார். அவரை ஆம்புலன்சில் ஏற்ற முயற்சித்தபோது என்னால் சுத்தமாக முடியவில்லை குழந்தை தலை வெளியே வருவது போல இருக்கிறது," என்றார்.

"மருத்துவ உதவிக்கு தேவையான அனைத்துமே ஆம்புலன்சில் இருந்தது. ஆம்புலன்ஸ் ஒரு சிறிய மருத்துவனை போன்று இருக்கும். அவருக்கு தேவையான அனைத்து மருத்துவ உபகரணங்களை கொண்டு சிகிச்சை அளிக்க தொடங்கினேன். அவருக்கு நீரிழப்பு (Dehydration) ஏற்படவே மிகவும் முடியாமல் போனது. உடனே அதற்கு வேண்டியதை செய்து அவரை சகஜ நிலைக்கு கொண்டுவரவும், அதே நேரத்தில் பிரசவமும் பார்த்தேன். இதில் கடினமான விஷயம் என்ன வென்றால் குழந்தையின் கழுத்தில் தொப்புள் கொடி சுற்றியிருந்தது. ஆனால் பாதுகாப்பாக அந்த குழந்தையை வெளியே எடுத்துவிட்டேன்," என்று தெரிவித்தார் சௌந்தரராஜன்.

வழியிலேயே பிரசவம்: இருளர் பழங்குடி தாய், சேயை காப்பாற்றிய 108 ஆம்புலன்ஸ் ஊழியர்
BBC
வழியிலேயே பிரசவம்: இருளர் பழங்குடி தாய், சேயை காப்பாற்றிய 108 ஆம்புலன்ஸ் ஊழியர்

"குறிப்பாக பிரசவ வலியால் துடிக்கும் ஒருவரை ஆம்புலன்சில் மருத்துவமனை அழைத்து செல்ல வேண்டும் என்றால் 20, 25 கி.மீ. தொலைவு சென்றுதான் அனுமதிக்க வேண்டிய சூழல் இருக்கும். அந்த நேரத்தில் மிகவும் முடியாமல் வழியிலேயே பிரசவம் நிறைய நடந்துள்ளது. அப்படி அழைத்து செல்லும்போது குழந்தை தலை வெளியே வந்தால் வாகனத்தை இயக்க முடியாது. மேற்கொண்டு இயக்கினால் தாய்க்கும், குழந்தைக்கும் ஏதாவது நேரிடும். ஆகவே வாகனத்தை நிறுத்திவிட்டு அவர்களுக்கு நானே பிரசவம் பார்ப்பேன். அதுபோன்று கிட்டத்தட்ட 13 பேருக்கு பிரசவம் பார்த்துள்ளேன்," என்று கூறுகிறார் சௌந்தரராஜன்.

"ஒரு மருத்துவ உதவியாளராக நாங்கள் செய்ய வேண்டியது. அதாவது ஒருவர் ஆம்புலன்சில் ஏற்றியதும், அவர்கள் எடுத்த ஸ்கேன், மருத்துவ ஆலோசனை அறிக்கை, அவர்கள் உடலில் வேறேதும் பாதிப்புகள் இருக்கிறதா என்பதை முழுவதுமாக ஆய்வு செய்து விடுவோம். மேலும் அவர்களுக்கு உடலில் ரத்த அழுத்தம், ரத்தத்தின் சக்கரை அளவு உள்ளிட்ட அனைத்து பரிசோதனையும் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் மேற்கொள்வோம்.

"ஒருவேளை குழந்தை வெளியே வருகிறது என்றால் மேற்கொண்டு கர்ப்பப்பை எந்த அளவுக்கு திறந்து இருக்கிறது என்பதையும் பரிசோதனை செய்வோம். அந்த நேரத்தில் அவர்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய சிகிச்சை அனைத்தையும் தயார் நிலையில் வைத்துக்கொண்டு பிரசவம் பாப்போம். "

"மருத்துவ உதவி செய்வதற்கு எங்களுக்கு மருத்துவர்கள் ஆலோசனை வழங்குவார்கள். அதன்படியே நாங்களும் சிகிச்சை மேற்கொள்கிறோம். வெறுமென தன்னிச்சையாக எதையுமே செய்வது கிடையாது. இவை அனைத்திற்கும் எங்களுக்கு முறையான பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது," என்கிறார் அவர்.

மேலும் பேசி அவர், "ஆதரவற்றவர்கள் சாலையில் அடிபட்டு கிடக்கும் போது, சாலையில் போறபோக்கில் யாரோ ஒரு நபர் 108க்கு தகவல் கொடுத்துவிட்டு சென்றுவிடுவார். பிறகு சம்பவ இடத்திற்கு சென்று பார்க்கும்போது ரத்த வெள்ளத்திலும், உடல் முழுவதும் இயற்கை உபாதைகளுமாக இருக்கும். அங்கே செல்பவர்கள் யாரிடமாவது அண்ணா கொஞ்சம் கை பிடியுங்கள், கொஞ்சம் தூக்கி விடுங்கள் என்று கேட்பேன். யாருமே உதவிக்கு வர மாட்டார்கள். பிறகு நான் மற்றும் ஓட்டுநர் இருவர் மட்டுமே இறுதியாக தூக்கி ஸ்டெச்சரில் வைத்து ஆம்புலன்சில் ஏற்றுவோம்."

"நிறைய நாட்கள் சாப்பிடாம இருந்ததுண்டு. சாப்பிடும்போதே ஆம்புலன்ஸ் அழைப்பு வரும். அடுத்த நொடியே வண்டியை எடுக்கணும். அப்போது சாப்பிடலாம் என்று தோணாது. அந்த நேரத்தில் என் சாப்பாட்டை தவிர்த்தால் ஓர் உயிரை காப்பாற்றி விடலாம். அங்கே சென்று அந்த உயிரை காப்பாற்றினால் மட்டுமே அன்று இரவு நிம்மதியாக உறக்கம் வரும்," என்று நெகிழ்வுடன் தெவித்தார் சௌந்தரராஜன்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

BBC Tamil
English summary
Ambulance staff saved a Tribal pregnant woman giving birth in Cuddalore
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X