பேருந்து அடியில் சிக்கிய பைக்.. அடுத்த நொடி ஷாக்! ஆந்திர பஸ் விபத்தில் உயிரிழப்பு அதிகரிக்க என்ன காரணம்!
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் இருந்து பெங்களூர் சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று திடீரென ஆந்திராவில் விபத்தில் சிக்கியுள்ளது. பைக் மீது மோதிய அந்தப் பேருந்து திடீரென முழுமையாக எரிந்து நாசமாகியுள்ளது. இந்த விபத்தில் 25 பயணிகள் வரை உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதற்கிடையே இந்த விபத்தில் உயிரிழப்புகள் அதிகரிக்க என்ன காரணம் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் இருந்து நேற்றிரவு கர்நாடகத் தலைநகர் பெங்களூருக்கு ஆம்னி பேருந்து ஒன்று வழக்கம் போலப் புறப்பட்டது. இன்று அதிகாலை அந்தப் பேருந்து திடீரென விபத்துக்குள்ளாகித் தீப்பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் பேருந்து முழுவதுமாக எரிந்து நாசமானது. இந்த விபத்தில் 25 பேர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

முக்கிய பாயிண்டுகள்
விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இருப்பினும், அதற்குள் பேருந்து முழுமையாக எரிந்து நாசமாகிவிட்டது. இந்த விபத்து குறித்து முக்கியமான பாயிண்டுகளை நாம் பார்க்கலாம்!
1. இன்று காலை 3:30 மணியளவில் கர்னூல் அருகே தேசிய நெடுஞ்சாலை 44-ல் இந்தச் சோகச் சம்பவம் நடந்துள்ளது. ஹைதராபாத்தில் இருந்து பெங்களூர் நோக்கி நள்ளிரவு புறப்பட்ட தனியார் வால்வோ பேருந்து, ஒரு இருசக்கர வாகனத்துடன் மோதியதாகக் கூறப்படுகிறது. அதுவே இந்த மோசமான விபத்திற்குத் தொடக்கப் புள்ளியாக இருந்துள்ளது.
தொடக்கப் புள்ளி
2. பேருந்தின் மீது மோதிய டூவீலர், அதன் அடியில் சிக்கியதால் தீப்பொறி ஏற்பட்டுள்ளது. அதில் பேருந்தும் தீப்பற்றி எரிந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இந்தப் பேருந்தில் மொத்தம் 40 பயணிகள் பயணம் செய்துள்ளனர். விபத்து நடந்தவுடன் உள்ளே இருந்த பயணிகளைக் காப்பாற்ற முயற்சி எடுக்காமல், பேருந்தின் ஓட்டுநர் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.
3. தீ விபத்து ஏற்பட்டதை உணர்ந்த 20 பயணிகள் பேருந்தின் ஜன்னல்களை உடைத்து வெளியே குதித்து உயிர் தப்பியுள்ளனர். இந்தக் கோர விபத்தில் 25 பேர் வரை உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 20 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உயிரிழப்பு அதிகரிக்கக் காரணம்
4. விபத்தில் சிக்கியது ஏசி பேருந்து... இதனால் பயணிகளால் உடனடியாக வெளியே குதிக்க முடியவில்லை. ஜன்னல் கண்ணாடியை உடைத்து, வெளியே குதிக்க வேண்டி இருந்தது. எந்தப் பயணிகளால் எல்லாம் சரியான நேரத்திற்குள் கண்ணாடியை உடைத்து வெளியே குதிக்க முடிந்ததோ.. அவர்கள் எல்லாம் உயிர் தப்பிவிட்டனர். கர்னூல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விக்ராந்த் பாட்டீலும் கூட இதை உறுதி செய்துள்ளார்.
தப்ப முடியவில்லை
5. மேலும், அதிகாலை 3.30 மணியளவில் விபத்து நடந்துள்ளது. அப்போது பெரும்பாலான பயணிகள் நல்ல தூக்கத்தில் இருந்துள்ளனர். இதனால் பெரும்பாலான பயணிகளுக்குப் பேருந்தில் தீப்பிடித்ததே தாமதமாகவே தெரிய வந்துள்ளது. இதன் காரணமாகவே அவர்களால் உடனடியாகத் தப்பிச் செல்ல முடியவில்லை. உயிரிழப்புகள் அதிகரிக்க இதுவும் முக்கிய காரணமாக இருந்துள்ளது.
6. காணாமல் போன பயணிகளைத் தேடும் பணிகளும், உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மேலும், இந்த விபத்தில் உயிரிழந்தோருக்குக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications