ஜெகன் ருத்ர தாண்டவம்.. சந்திரபாபு நாயுடுவை தொடர்ந்து மகன் நாரா லோகேஷ் கைதா? ஆந்திராவில் பரபரப்பு
விசாகப்பட்டினம்: ஊழல் வழக்கில் ஆந்திரா முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகன் நாரா லோகேஷ் அம்மாநில உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளது. இதனால் நாரா லோகேஷ் கைது செய்யப்படலாம் என பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஆந்திரா சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. ஆந்திராவில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தல்களில் அதிக இடங்களைக் கைப்பற்றும் என பல்வேறு கருத்து கணிப்புகள் தெரிவித்து வருகின்றன.

சந்திரபாபு நாயுடு சிறையில்..: இதனால் பாஜகவுடன் கூட்டணி அமைக்க முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு முயற்சித்தார். ஆனால் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசம் கட்சியை கூட்டணியில் சேர்க்க ஆந்திரா பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்நிலையில் ஊழல் வழக்கில் சந்திரபாபு நாயுடு அதிரடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் சந்திரபாபு நாயுடுவை சந்தித்த நடிகர் பவன் கல்யாண் தமது ஜனசேனா கட்சியும் தெலுங்குதேசமும் கூட்டணி அமைத்துள்ளதாக அறிவித்தார்.
அப்பா ஜாமீன் மனு நிலுவையில்..: இந்நிலையில் புதிய பரபரப்பாக, அமராவதி இன்னர் ரிங் ரோடு மறுசீரமைப்பு ஊழல் வழக்கில் சந்திரபாபு நாயுடுவின் மகனும் தெலுங்குதேசம் கட்சிப் பொதுச் செயலாளருமான நாரா லோகேஷ் 14-வது குற்றவாளியாக சேர்க்க்கப்பட்டார். இதே வழக்கில்தான் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டு ஜாமீன் மனு போட்டு காத்திருக்கிறார்.

மகன் முன்ஜாமீன் மனு டிஸ்மிஸ்: அதே ஊழல் வழக்கில் மகன் முன்ஜாமீன் கேட்டு ஆந்திரா உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். ஆனால் ஆந்திரா உயர்நீதிமன்றம், நாரா லோகேஷ் முன்ஜாமீன் மனுவை இன்று டிஸ்மிஸ் செய்துவிட்டது. இதனால் நாரா லோகேஷ் கைது செய்யப்படலாம் என்கிற பரபரப்பு நிலவுகிறது.

நாரா லோகேஷ் உடனடி கைது இல்லை?: ஆனால் ஆந்திரா சிஐடி போலீசார் இன்று உயர்நீதிமன்ற விசாரணையின் போது, நாரா லோகேஷுக்கு எதிராக பதிவு செய்யப்பட்டிருந்த 409-வது செக்சனை ரத்து செய்வதாக தெரிவித்திருந்தனர். 41-A செக்ஷனில் மட்டும் வழக்கு பதிவு செய்து அவருக்கு நோட்டீஸ் வழங்க ஆந்திரா போலீஸ் அதிகாரிகள் டெல்லி சென்றுள்ளதாக தெரிவித்தனர். அதாவது 409-வது செக்சன் கீழ் வழக்கு பதிவு செய்திருந்தால் நோட்டீஸ் வழங்காமலேயே நாரா லோகேஷை ஆந்திரா போலீஸ் கைது செய்யலாம். தற்போது அந்த பிரிவு கைவிடப்பட்டிருப்பதால் சற்று நிம்மதி அடைந்துள்ளதாம் நாரா லோகேஷ் தரப்பு. ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அரசின் இந்த ருத்ரதாண்டவம், தெலுங்குதேசம் கட்சியை நிலைகுலைய வைத்து கொண்டிருக்கிறதாம்!


Click it and Unblock the Notifications
