"சலோ விஜயவாடா.." குலுங்கியுள்ளது ஆந்திரா! சம்பள உயர்வு விவகாரத்தில் 2 லட்சம் அரசு ஊழியர்கள் பேரணி
அமராவதி: அரசு ஊழியர்களின் ஊதியம் தொடர்பான ஆந்திர அரசின் அறிவிப்புக்கு எதிராக நடைபெற்ற சலோ விஜயவாடா பேரணியில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான அரசு ஊழியர்கள் பங்கேற்றனர்.
ஆந்திர மாநிலத்தில் கடந்த 2019இல் சட்டசபைத் தேர்தல் நடைபெற்ற சமயத்தில் ஜெகன்மோகன் ரெட்டி மாநிலம் முழுவதும் பாதயாத்திரை மேற்கொண்டார். அந்த சமயத்தில் அவர் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.
இருப்பினும், சட்டசபை தேர்தலில் வென்று ஆட்சி அமைத்த பின்னர், தனது வாக்குறுதிகளை ஜெகன்மோகன் ரெட்டி நிறைவேற்றத் தவறிவிட்டதாகப் பலரும் விமர்சித்து வருகின்றனர்.

ஆந்திர அரசு
குறிப்பாக பாத யாத்திரை சமயத்தில் அரசு ஊழியர்களுக்குப் பழைய ஓய்வூதிய முறை ரத்து செய்யப்பட்டு, புதிய ஓய்வூதிய முறை அமல்படுத்தப்படும் என ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்திருந்தார். இருப்பினும், ஆட்சி அமைத்து 3 ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில், இன்னும் அவரால் இந்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியவில்லை. இந்தச் சூழலில் சில வாரங்களுக்கு முன்பு அரசு ஊழியர்களுக்கு 11ஆவது ஊதிய திருத்தக் குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில் ஊதிய உயர்வு அளிக்கப்பட்டது.

வாய்ப்பில்லை
இந்த புதிய அறிவிப்பின் படி அரசு ஊழியர்களின் ஊதிய உயர்வு 23 சதவீதம் இருக்கும் எனக் கூறப்பட்டிருந்தது. இது தற்போதுள்ள இடைக்கால நிவாரணமான 27%ஐ விடக் குறைவாகும். எனவே, இதனால் அரசு ஊழியர்களின் ஊதியம் குறையும் சூழல் உருவானது. எனவே இந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என அரசு ஊழியர்கள் வலியுறுத்தினர். இது தொடர்பாக பிப். 1ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தில் அரசாணையை ரத்து வாய்ப்பில்லை என அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டது.

பேரணி
இதைக் கண்டித்து ஆந்திரப் பிரதேச அரசு எதிராக அம்மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் இன்று "சலோ விஜயவாடா" என்ற மாபெரும் கண்டனப் பேரணியை நடத்தினர். இந்த பேரணியில் அரசு ஊழியர்கள் பங்கேற்பதைத் தடுக்க 144 தடை உத்தரவு போடப்பட்டது. மேலும் பல்வேறு பகுதிகளில் போலீசார் சோதனை நடத்தினர். இருப்பினும், அதையும் தாண்டி ஒரு லட்சத்திற்கும் அதிகமான அரசு ஊழியர்கள் சலோ விஜயவாடா பேரணியில் பங்கேற்றனர். அதில் அரசுக்கு எதிரான முழக்கங்கள் எழுப்பிய அவர்கள், ஆந்திர அரசின் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

தொடர் வேலை நிறுத்தம்
இந்த பேரணி தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், தங்களது கோரிக்கைகளை ஏற்கவிட்டால் வரும் 7ஆம் தேதி முதல் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் அரசு ஊழியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் போராட்டத்தால் ஒட்டுமொத்த விஜயவாடா நகரமே முடங்கிப் போனது.












Click it and Unblock the Notifications