இந்தியாவின் முதல் தனியார் தங்க சுரங்கம்.. ஆந்திராவில் அமைகிறது.! அப்போ இனி தங்கம் விலை குறையுமா?
அமராவதி: இந்தியாவின் முதல் தனியார் தங்க சுரங்கம் ஆந்திராவில் அமையவுள்ளது. அங்கு கர்னூல் மாவட்டத்தில் தங்க இருப்பு கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், சுமார் 2 ஆண்டுகள் ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் முடிவுகள் திருப்திகரமாக இருந்த நிலையில், இரு நிறுவனங்கள் இணைந்து அங்கு தங்கத்தை வெட்டி எடுக்கும் பணிகளை சீக்கிரம் தொடங்கவுள்ளது.
சர்வதேச அளவில் தங்கத்தை அதிகம் பயன்படுத்தும் நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்கிறது. நமது நாட்டின் கலாச்சாரத்தில் தங்கத்திற்கு ஒரு முக்கிய பங்கு இருப்பதால் அனைத்து நல்ல காரியங்களிலும் தங்கம் முக்கியத்துவம் பெறுகிறது.

தங்க சுரங்கம்
அதேநேரம் நமது நாட்டின் தங்க தேவை பெரும்பாலும் இறக்குமதி மூலமாகவே பூர்த்தி செய்யப்படுகிறது. கர்நாடகா உள்ளிட்ட சில இடங்களில் தங்கம் வெட்டி எடுக்கப்பட்டாலும் பெரும்பகுதி இறக்குமதியே செய்யப்படுகிறது. மேலும், இதுவரை நமது நாட்டில் உள்ள தங்க சுரங்கங்கள் அனைத்துமே அரசின் கட்டுப்பாட்டிலேயே இருந்துள்ளன. அரசு நிறுவனங்கள் தான் தங்கத்தை வெட்டி எடுத்து வருகின்றன.
நாட்டின் முதல் தங்க சுரங்கம்
இதற்கிடையே இந்தியாவின் முதல் தனியார் தங்க சுரங்கம் இப்போது அமைகிறது. ஆந்திரப் பிரதேசத்தின் கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஜொன்னகிரி பகுதியில் தான் இந்த தங்க சுரங்கம் அமைகிறது. அங்கேயே தங்கம் வெட்டி எடுக்கப்பட்டு, பிராசஸ் செய்யப்படும் என தெரிகிறது. இது குறித்து கர்நடாக அரசு நாளை பொதுமக்களிடையே கருத்து கேட்கவும் உள்ளது.
சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, இதே இடத்தில் ஜியோமைசூர் மற்றும் டெக்கான் கோல்ட்மைன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தங்கத்தை வெட்டி எடுப்பது குறித்து சோதனை செய்தனர். சோதனை முடிவுகள் வெற்றிகரமாக இருந்த நிலையில், முழு வீச்சில் இதற்கான பணிகளை ஆரம்பிக்க முடிவு செய்துள்ளனர். கருத்து கேட்பிற்கு பிறகு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்படும். அந்த அனுமதி கிடைத்தவுடன் மூன்று மாதங்களுக்குள் தங்கம் உற்பத்தியை தொடங்க திட்டமிட்டுள்ளனர்.. இப்பகுதியில் இருந்து ஆண்டுக்கு குறைந்தது 750 கிலோ தங்கத்தை வெட்டி எடுக்க முடியும் என்று அந்நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
கர்னூல் வரலாறு
ஆந்திராவின் இந்த கர்னூல் பகுதியில் தங்கம் இருப்பதை இந்திய புவியியல் ஆய்வு மையம் 1994ஆம் ஆண்டு முதலில் கண்டுபிடித்தது. தொடர்ந்து ஆய்வு பணிகளை மேற்கொள்ள தனியார் நிறுவனங்களையும் அழைத்தது. இருப்பினும், அதற்கு பெரிய முதலீடு தேவை என்பதால் அப்போது எந்தவொரு நிறுவனமும் ஆய்வு செய்ய முன்வரவில்லை.
2005ம் ஆண்டு மைனிங் பாலிசி மாற்றி அமைக்கப்பட்ட பிறகு, மீண்டும் தனியார் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அப்போது புவியியலாளர் டாக்டர் மாதிரி ஹனுமா பிரசாத் தலைமையிலான பெங்களூரை சேர்ந்த ஜியோமைசூர் சர்வீசஸ் லிமிடெட் ஜொன்னகிரி மண்டலத்தில் ஆய்வு செய்ய உரிமத்தைப் பெற்றது. இருப்பினும், அனைத்து அனுமதிகளையும் பெற்று அங்கு சோதனையை தொடங்கவே சுமார் 10 ஆண்டுகள் ஆனது.
எந்த நிறுவனங்கள்
இந்த இடைப்பட்ட காலத்தில் சோதனைக்கான உரிமத்தை பெற்றிருந்த ஜியோமைசூர் நிறுவனத்தில் 40% பங்குகளை டெக்கான் கோல்ட் மைன்ஸ் என்ற நிறுவனம் வாங்கியது. மேலும், முதற்கட்ட ஆய்வுக்காக துக்கலி மற்றும் மட்டிகேரா மண்டலங்களில் சுமார் 750 ஏக்கர் நிலத்தை வாங்கியது. மேலும், சுமார் 1,500 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்தது. அனைத்தும் முடிந்து 2021ஆம் ஆண்டில் சோதனைகளைத் தொடங்கியது.
அடுத்து என்ன
இது குறித்து ஜியோமைசூரின் நிர்வாக இயக்குனரான பிரசாத் கூறுகையில், "இப்போது நாங்கள் இங்கு சுமார் 30,000 ஆழ்துளைக் கிணறுகள் மூலம் சோதனைகளை நடத்தி வருகிறோம். இரு ஆண்டு ஆய்வில் இங்கு கமர்ஷியலாக தங்கத்தை வெட்டி எடுப்பது சரியாக இருக்கும் என்ற முடிவுக்கு வந்துள்ளோம். நாங்கள் கடந்த டிசம்பர் மாதமே பணிகளை தொடங்க விரும்பினோம். ஆனால், சில ஆய்வு முடிவுகள் வர தாமதம் ஆனது" என்றார்.
விலை குறையுமா?
தற்போது தங்கத்தை இறக்குமதி செய்ய நாம் டாலரை தர வேண்டி உள்ளது. இது அந்நிய செலாவணியை பாதிக்கிறது. தங்கம் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யும் போது இந்த சிக்கல் குறையும். அதேநேரம் இந்த சுரங்கம் மூலம் நமக்கு அதிகபட்சமே ஆண்டுக்கு 750 கிலோ தான் கிடைக்கும். இது நாம் இறக்குமதி செய்யும் 700 டன்னில் சிறு துரும்பு சைஸ் தான். எனவே, இதனால் தங்கம் விலை குறைய வாய்ப்பில்லை.












Click it and Unblock the Notifications