ரூ371 கோடி ஊழல்: சந்திரபாபு நாயுடுவுக்கு வீட்டு சிறை? 5 நாள் போலீஸ் கஸ்டடி? தீர்ப்புக்காக வெயிட்டிங்
விஜயவாடா: ரூ371 கோடி ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஆந்திரா முன்னாள் முதல்வரும் தெலுங்குதேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு தாக்கல் செய்த ஜாமீன் மனு மீது இன்று விஜயவாடா நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது.
ரூ371 கோடி ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட சந்திரபாபு நாயுடு தற்போது 14 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அம்மாநில ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் அரசின் அமைச்சர் ரோஜா உள்ளிட்டோர், சந்திரபாபு நாயுடு சிறைக்கு அனுப்பப்பட்டதை பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி மகிழ்ந்தனர்.

இதனைத் தொடர்ந்து சந்திரபாபு நாயுடுவுக்கு ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த ஜாமீன் மனு மீது விஜயவாடா சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று விசாரணை நடத்தப்பட்டது.
இந்த விசாரணையின் போது, சந்திரபாபு நாயுடுவின் முதுமை, உடல்நிலையை கருத்தில் கொண்டு அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும்; அல்லது அவரை சிறையில் அடைப்பதற்கு பதில் வீட்டு சிறையில் அடைக்க அனுமதிக்க வேண்டும் என வாதிடப்பட்டது. இதற்கு மாநில அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
சந்திரபாபு நாயுடு தரப்பில் உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் சித்தார்த்தா லுத்ரா ஆஜாரானார். அப்போது, சிறையில் சந்திரபாபு நாயுடுவின் உயிருக்கும் அச்சுறுத்தல் இருக்கிறது எனவும் சுட்டிகாட்டினார். ஆனால் இதற்கும் அரசு தரப்பில் எதிர்ப்பு வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
மேலும் சந்திரபாபு நாயுடு விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைக்கவில்லை; அவரை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என ஆந்திரா சிஐடி போலீசாரும் மனுத் தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்கள் மீதான விசாரணைகள் முடிவடைந்த நிலையில் விஜயவாடா சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது. இன்றைய தீர்ப்பில் சந்திரபாபு நாயுடுவுக்கு ஜாமீன் கிடைக்குமா? வீட்டுச் சிறையா? அல்லது போலீஸ் கஸ்டடிக்கு அனுப்பப்படுவாரா? என்பது தெரிய வரும்.












Click it and Unblock the Notifications