"வங்கதேச பயங்கரவாதிகள்".. வக்பு சட்டத்தால் இந்தியாவுக்கு ஸ்கெட்ச்.. உளவுத்துறை பகீர் வார்னிங்
கொல்கத்தா: மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வக்ஃபு திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கு வங்கத்தில் இஸ்லாமிய அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இது வன்முறையானது. 3 பேர் இறந்துள்ளனர். இந்நிலையில் தான் 2019 சிஏஏ எதிர்ப்புக்கு எதிராக நடந்த போராட்டத்தை போல் இந்த போராட்டத்தை தீவிரப்படுத்த வங்கதேசத்தின் பயங்கரவாத அமைப்பு சதித்திட்டம் தீட்டி வருவதாக உளவுத்துறை எச்சரிக்கை செய்துள்ள நிலையில் அதுபற்றிய பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.
மத்திய அரசு வக்ஃபு சட்ட திருத்த மசோதாவை கொண்டு வந்தது. நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஜனாதிபதி திரெளபதி முர்மு ஒப்புதல் வழங்கி உள்ளார். இதனால் வக்பு சட்ட திருத்தம் சட்டமாகி உள்ளது. இந்த சட்டம் என்பது வக்ஃபு வாரியத்தின் உரிமையை பறிப்பதாக எதிர்க்கட்சிகள் மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் கூறி வருகின்றன.

இந்த புதிய சட்டத்தை கண்டித்து போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் வன்முறையாக மாறியது. 3 பேர் இறந்தனர். ஏராளமானவர்கள் காயமடைந்தனர்.
தொடர்ந்து பதற்றம் நிலவி வருவதால் தற்போது அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. எல்லை பாதுகாப்பு படையினர், ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ஐபிஎஸ் அதிகாரிகள் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளனர். தற்போது வரை 150 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இண்டர்நெட் சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. முர்ஷிதாபாத் வன்முறைகள் வெடித்ததால், மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, தங்களது மாநிலத்தில் ஒரு போதும் மத்திய அரசின் வக்பு வாரிய சட்ட திருத்தம் அமல்படுத்தப்படாது என அறிவித்தார்.
இந்நிலையில் தான் மேற்கு வங்கத்தில் நடந்த வன்முறை குறித்த திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. அதாவது இந்த வன்முறையை இன்னும் தீவிரமாக்க வங்கதேசத்தின் பயங்கரவாத அமைப்பு திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை தெரிவித்துள்ளது. அதாவது வங்கதேசத்தில் ஜேஎம்பி எனும்‛ ஜமாத் உல் முஜாகிதீன் வங்கதேசம்' (JMB or Jammat-Ul-Mujahideen Bangladesh) என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. நம் நாட்டில் இந்த அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதோடு வங்கதேசத்தை சேர்ந்த பயங்கரவாத அமைப்பு என்று இந்த அமைப்பு பட்டியலிடப்பட்டுள்ளது. இப்படியான சூழலில் தான் இந்த ஜமாத் உல் முஜாகிதீன் என்ற அமைப்பு மேற்கு வங்க மாநிலத்தில் ஆட்சேர்ப்பு பணியில் ஈடுபட்டுள்ளது. மதராசா உள்பட சில இடங்களில் மேற்கு வங்கத்தில் பயிற்சிகளை கொடுத்து வருகிறது.
இந்த அமைப்பு என்பது மேற்கு வங்க மாநிலத்தில் பல்வேறு தாக்குதல்களை நடத்தி உள்ளது. இப்போது மீண்டும் அந்த அமைப்பு ஆக்டிவ்வாக செயல்பட துடிக்கிறது. குறிப்பாக மேற்கு வங்கம் - வங்கதேசம் எல்லையில் இந்த அமைப்பு பயிற்சி முகாம்களை நடத்துகிறது. வங்கதேசத்தின் எல்லையில் உள்ள மேற்கு வங்க மாநிலத்தின் 7 மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்களை குறிவைத்து சேர்த்து பயிற்சி கொடுக்கிறது.
இந்த அமைப்பு கடந்த 2019ம் ஆண்டு நம் நாட்டில் சிஏஏவுக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்காற்றியது. அதுபோன்ற சூழலை வக்ஃபு சட்டத்தை அடிப்படையாக வைத்து நம் நாட்டில் பிரச்சனைகளை உருவாக்க மீண்டும் ஜமாத் உல் முஜாகிதீன் வங்கதேசம் அமைப்பு தீவிரமாகி வருகிறது என்று உளவுத்துறை சார்பில் வார்னிங் செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications