தீபாவளி பரிசு! இலவச கேஸ் சிலிண்டர்..பயனாளி வீட்டுக்கே சென்று “டீ” போட்டு குடித்த சந்திரபாபு நாயுடு!
அமராவதி: வருடத்துக்கு 3 இலவச கேஸ் சிலிண்டர் வழங்கும் திட்டத்தை, பயனாளியின் வீட்டிற்கே சென்று இன்று தொடங்கி வைத்தார் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு. இலவச கேஸ் சிலிண்டர் திட்டத்தை தொடங்கி வைத்து, பயனாளியின் வீட்டில் தானே டீ போட்டு குடித்துள்ளார் சந்திரபாபு நாயுடு.
ஆந்திர மாநில சட்டசபை தேர்தலின்போது சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சியின் முக்கியமான ஆறு வாக்குறுதிகளில் ஒன்று தான் வருடத்துக்கு மூன்று இலவச சிலிண்டர் வழங்கும் திட்டம். சந்திரபாபு நாயுடுவின் 'சூப்பர் 6' வாக்குறுதிகள் மக்களை ஈர்த்தன. தெலுங்கு தேசம் கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆந்திர முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு பொறுப்பேற்றார்.

ஆந்திர முதல்வர் அதிரடி திட்டம்: இந்நிலையில், அமராவதியில் கடந்த அக்டோபர் 23 ஆம் தேதி ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், ஆண்டுக்கு மூன்று இலவச சிலிண்டர்கள் திட்டத்தை தீபாவளி முதல் நடைமுறைப்படுத்த அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக, ஆந்திர மாநில பொது வழங்கல் துறை அமைச்சர் மனோகர் அறிவித்தார்.
இந்த திட்டத்துக்கு ஆந்திர மாநில அரசு சார்பில் ஆண்டுக்கு ரூ.2,684 கோடி ஒதுக்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. ஒவ்வொரு நான்கு மாதத்துக்கும் ஒரு இலவச சிலிண்டர் வழங்கப்படும். பணம் செலுத்தி சிலிண்டர் பெற்றுக் கொள்ள வேண்டும். சிலிண்டர் வாங்கிய 48 மணி நேரத்துக்குள் பணம் வங்கியில் வரவு வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
3 இலவச சிலிண்டர்கள்: இதைத்தொடர்ந்து, இலவச கேஸ் சிலிண்டர் வழங்குவதற்காக பெட்ரோலிய நிறுவனங்களுக்கு ரூ.894 கோடி ரூபாய் மதிப்பிலான காசோலை வழங்கப்பட்டது. இலவச கேஸ் சிலிண்டர் திட்டத்திற்கான சிலிண்டர்களை முன்பதிவு செய்யும் பணி கடந்த அக்டோபர் 29 ஆம் தேதி தொடங்கியது.

இதையடுத்து, பயனாளிகளுக்கு ஆண்டுக்கு மூன்று இலவச சிலிண்டர் வழங்கும் திட்டத்தை இன்று தொடங்கி வைத்தார் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு. இந்த திட்டத்துக்கு தீபம் 2.0 என பெயரிடப்பட்டுள்ளது. முன்பதிவு செய்த 48 மணி நேரத்திற்குள் ஒவ்வொரு பயனாளிக்கும் 25 ரூபாய் மத்திய மானியம் தவிர்த்து, 876 ரூபாய் அவர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.
வீட்டுக்கே சென்று டீ போட்ட சந்திரபாபு நாயுடு: ஆண்டுக்கு 3 இலவச கேஸ் சிலிண்டர் வழங்கும் திட்டத்தை, ஸ்ரீகாக்குளம் மாவட்டத்தில் உள்ள பயனாளியின் வீட்டிற்கே சென்று தொடங்கி வைத்தார் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு. இலவச கேஸ் சிலிண்டர் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்து பயனாளியின் வீட்டில் தானே கேஸ் அடுப்பை பற்ற வைத்து, தேநீர் செய்து, வீட்டில் இருந்தவர்களுக்கும் கொடுத்து தானும் அருந்தினார் சந்திரபாபு நாயுடு.

ஆந்திர அரசின் 3 இலவச சிலிண்டர்களை பெறுவதற்கான தகுதிகள்:
1. விண்ணப்பதாரர் ஆந்திரப் பிரதேசத்தில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும்.
2. வீட்டில் சிங்கிள் LPG எரிவாயு இணைப்பு இருக்க வேண்டும்.
3. விண்ணப்பதாரர் பொருளாதார ரீதியில் நிலையற்ற பிரிவைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
4. விண்ணப்பதாரர் வீட்டு எரிவாயு இணைப்பு பெற்றிருக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications