ஹாக்கி அமைப்பிலும் முறைகேடு செய்தார் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி- கே.பி.எஸ். கில் வீசும் புது குண்டு
டெல்லி: கிரிக்கெட் சங்கத்தில் மட்டுமல்ல ஹாக்கி இந்தியா அமைப்பிலும் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி முறைகேடு செய்ததாக அதன் முன்னாள் தலைவர் கே.பி.எஸ். கில் அதிரடி குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார். ஹாக்கி இந்தியா அமைப்பின் வழக்கறிஞராக அருண் ஜேட்லி தம் மகளை நியமித்து அவருக்கு கட்டணமாக பெருமளவு பணம் கொடுக்கச் செய்தார் என கில் புகார் தெரிவித்துள்ளார்.
டெல்லி கிரிக்கெட் சங்கத் தலைவராக அருண் ஜேட்லி பதவி வகித்த காலத்தில் முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றம்சாட்டி டெல்லி மாநில அரசு ஒருநபர் விசாரணை கமிஷனை அமைத்துள்ளது. இதற்கு பா.ஜ.க. கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இந்த நிலையில் ஹாக்கி இந்தியா அமைப்பின் முன்னாள் தலைவர் கே.பி.எஸ். கில், அருண் ஜேட்லி மீது அதிரடி குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கிறார். இது தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு அவர் அனுப்பிய கடிதத்தில்,
ஹாக்கி இந்தியா லீக் நிர்வாகக் குழுவில் ஜேட்லி இடம்பெற்றுள்ளார். அவர் தமது மகளை ஹாக்கி இந்தியாவுக்கான வழக்கறிஞராக நியமித்தார்;
அவருக்கான கட்டணமாக ஹாக்கி இந்தியா அமைப்பு பெருமளவு பணம் கொடுத்தது. இதுபோல் ஹாக்கி இந்தியா அமைப்பிலும் ஏராளமான நிதி முறைகேடுகள் நிகழ்ந்துள்ளன.
ஆகையால் ஹாக்கி இந்தியா லீக் அமைப்பின் நிர்வாகக் குழுவில் இருந்தோ அல்லது மத்திய அமைச்சர் பதவியில் இருந்தோ அருண் ஜேட்லி ராஜினாமா செய்ய வேண்டும்.
ஹாக்கி இந்தியா அமைப்பின் முறைகேடுகள் குறித்தும் உரிய விசாரணை நடத்தி அதை சரியான பாதைக்கு திருப்ப வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications