தேர்தலுக்கு முன்பே பாஜகவுக்கு வெற்றி.. அருணாசல பிரதேசத்தில் 5 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு!
இட்டாநகர்: அருணாச்சல பிரதேச சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறும் நிலையில், ஆளும் பாஜகவை சேர்ந்த 5 வேட்பாளர்கள் போட்டியின்றி எம்.எல்.ஏக்களாக தேர்வு செய்யப்பட உள்ளனர்.
நாடாளுமன்ற பொதுத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. மக்களவைத் தேர்தல் மட்டும் இல்லாமல் இந்தியாவில் உள்ள 5 மாநிலங்களில் சட்டமன்ற பொதுத் தேர்தலும் நடைபெற உள்ளது. ஒடிசா, ஹரியானா, ஆந்திர பிரதேசம், அருணாசல பிரதேசம் மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களுக்கு மக்களவைத் தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தலும் நடக்கிறது.

அருணாச்சல பிரதேசத்தில் மக்களவைத் தேர்தலுடன் ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அருணாச்சல பிரதெச மாநிலத்தில் 60 சட்டப்பேரவை தொகுதிகளும், 2 மக்களவை தொகுதிகளும் உள்ளன. அங்கு வரும் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் கட்ட தேர்தலிலேயே வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஜூன் 2ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்நிலையில், முதல் கட்ட தேர்தல் வேட்பு மனுத் தாக்கல் நேற்றுடன் முடிவடைந்தது. வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளான நேற்று, அருணாசல பிரதேசத்தில் உள்ள 2 மக்களவைத் தொகுதிகளுக்கு 15 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
அருணாச்சல பிரதேசத்தில் 60 சட்டசபை தொகுதிகளுக்கு மொத்தம் 197 வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர். பாஜக 60 பேரவைத் தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. எதிர்க்கட்சியான காங்கிரஸ் 34 தொகுதிகளிலும், தேசிய மக்கள் கட்சி 29 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன. தேசியவாத காங்கிரஸ் கட்சி 17 வேட்பாளர்களையும், அருணாச்சல மக்கள் கட்சி 2 வேட்பாளர்களையும் நிறுத்தியுள்ளன.
அருணாச்சல பிரதேச சட்டப் பேரவைத் தேர்தல் வேட்பு மனு தாக்கலில் அம்மாநிலத்தில் ஆளும் பாஜக முதல்வர் பெமா காண்டு போட்டியிடும் முக்டோ தொகுதியில் அவரை எதிர்த்து யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. இதனால் பெமா காண்டு, போட்டியின்றி எம்.எல்.ஏவாக தேர்வாகிறார்.
இதேபோல், காங்கிரஸ் வேட்பாளர்கள் மற்றும் பிற வேட்பாளர்கள் நேற்று தங்கள் வேட்பு மனுக்களை திரும்பப் பெற்றதால், ஜிக்கே டாகோ (தாலி தொகுதி), நியாடோ டுகோம் (தாலிஹா தொகுதி), ரட்டு தேச்சி (சாகலி தொகுதி), முச்சு மிட்டி (ரோயிங் தொகுதி) ஆகிய பாஜக வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்வாக உள்ளனர். 30ஆம் தேதி வேட்பு மனு வாபஸ் பெறும் நேரம் முடிவடைந்ததும், இந்த வெற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.
இந்நிலையில் இதுதொடர்பாக பேசியுள்ள அருணாச்சல் பிரதேச முதல்வர் பெமா காண்டு, " 5 தொகுதிகளில் ஒரே ஒரு வேட்புமனு மட்டுமே தாக்கல் ஆகியுள்ளதால் நாங்கள் 5 பேர் போட்டியின்றி தேர்வாகியுள்ளோம். வேட்பு மனுக்களை திரும்பப் பெற வரும் 30ஆம் தேதி கடைசி நாள் என்பதால் தங்களின் வேட்பாளர்கள் மேலும் பலர் போட்டியின்றி தேர்வாக வாய்ப்பு உள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.
கடந்த 2019 சட்டப்பேரவைத் தேர்தலில் அருணாசல பிரதேசத்தில் பாஜக 41 இடங்களில் வெற்றி பெற்றது. பின்னர் மற்ற கட்சிகளைச் சேர்ந்த 7 எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்தனர். 2019 தேர்தலில் இரண்டு மக்களவைத் தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெற்றது.












Click it and Unblock the Notifications