"ஜெய் ஸ்ரீ ராம்!" சத்தமாக சொன்ன கெஜ்ரிவால்! பக்தர்களின் அயோத்தி பயண கட்டணத்தை ஏற்பதாகவும் அறிவிப்பு
காந்திநகர்: டெல்லி, பஞ்சாபிற்கு அடுத்து இப்போது குஜராத்தில் கட்சியை வலுப்படுத்தும் முயற்சியில் அரவிந்த் கெஜ்ரிவால் ஈடுபட்டு உள்ளார்.
ஆம் ஆத்மி கட்சி டெல்லியைத் தாண்டி இந்த ஆண்டு முதல்முறையாகப் பஞ்சாபில் ஆட்சியைப் பிடித்தது. அங்குத் தனிப்பெரும்பான்மை உடன் ஆம் ஆத்மி வென்ற நிலையில், பகவந்த் மான் முதல்வராக உள்ளார்.
பஞ்சாபிற்கு அடுத்ததாக இப்போது குஜராத்தில் கட்சியை வலுப்படுத்தும் முயற்சியில் ஆம் ஆத்மி இறங்கி உள்ளது. இந்தாண்டு அங்குத் தேர்தல் நடக்கும் நிலையில் கெஜ்ரிவால் அங்கேயே முகாமிட்டுள்ளார்.

அரவிந்த் கெஜ்ரிவால்
அதன்படி நேற்று குஜராத்தின் வதோதராவில் நடந்த பேரணியில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கலந்து கொண்டார். அப்போது அங்கு அவர் "ஜெய் ஸ்ரீராம்" என்று முழக்கமிட்டார். ஆம் ஆத்மி இந்துக்களுக்கு எதிரான கட்சி என்ற பிரசாரத்தை அங்குள்ள பாஜக முன்னெடுத்த நிலையில், அதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக அவர் பேரணியில் "ஜெய் ஸ்ரீராம்" என்று முழக்கமிட்டார்.

"ஜெய் ஸ்ரீராம்"
இந்த பேரணியில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் திரண்டு இருந்தனர். அவர்களைப் பார்த்து "ஜெய் ஸ்ரீராம்" மற்றும் "ஜெய் சாய் கிருஷ்ணா என்று முழங்கிய கெஜ்ரிவால் தனது பேச்சைத் தொடங்கினார். கூட்டத்தில் பேசிய கெஜ்ரிவால், "அவர்கள் என்னைப் பற்றி மோசமாகப் பேசுகிறார்கள். எனக்குக் கவலையில்லை. அவர்கள் என்னை வெறுக்கிறார்கள்.. என்னை அவமதிக்க வேண்டும் என்ற நோக்கில் அவர்கள் கடவுளை அவமதிக்கிறார்கள்.

அயோத்தி ராமர் கோயில்
நான் அனுமனின் சீடன், அவர்கள் தீயவர்களின் வம்சத்தை சேர்ந்தவர்கள்.. நான் ஜென்மாஷ்டமி நாளில் பிறந்தேன். கடவுள் இந்த பூமிக்கு என்னை ஒரு சிறப்பு நோக்கத்துக்காக அனுப்பியுள்ளார்: ஊழல் செய்பவர்களை அழிப்பதே எனது நோக்கம்.. குஜராத்தில் ஆட்சிக்கு வந்தால், அயோத்தி ராமர் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்ய விரும்பும் மக்களின் முழு செலவையும் ஆம் ஆத்மி அரசு ஏற்கும்..

சிறப்புத் திட்டம்
ராமர் பக்தர்களை அயோத்திக்கு இலவசமாக அழைத்துச் செல்லும் இதேபோன்ற திட்டத்தை டெல்லியில் தொடங்கி உள்ளோம். ரயில் கிளம்பும் போதும், திரும்பும்போதும் நான் ரயில்வே ஸ்டேஷன் சென்றேன். அங்கு அவர்கள் என்னை மனதார வாழ்த்தினார்கள். இந்த ஆண்டு டிசம்பரில் நடைபெற உள்ள குஜராத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி தான் வெற்றி பெறும், ஏனெனில் ஆம் ஆத்மி கட்சி தான் மக்களுக்காகவும், கடவுளுக்காகவும் பாடுபடுகிறது" என்றார்.












Click it and Unblock the Notifications