கேஜ்ரிவாலுக்கு காய்ச்சல்.. இருந்தாலும் சொன்னபடி இலவச குடிநீர் அறிவிப்பை வெளியிடுகிறார்
டெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு உடம்பு சரியில்லை. இதனால் அவர் இன்று அலுவலகம் வரவில்லை. இருப்பினும் ஏற்கனவே அறிவித்தபடி டெல்லி மக்களுக்கான இலவச குடிநீர் குறித்த அறிவிப்பை இன்று மாலையில் அவர் வெளியிடவுள்ளார்.
இன்று மாலை 4 மணிக்கு அவர் தனது வீட்டில் இருந்தபடி டெல்லி நீர் வாரிய அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்துகிறார். அதன்பின்னர் டெல்லிவாசிகளுக்கு வீட்டுக்கு தினசரி 700 லிட்டர் இலவச குடிநீர் விநியோகம் குறித்த அறிவிப்பை வெளியிடவுள்ளார்.
முன்னதாக தனது உடல் சுகவீனம் குறித்து டிவிட்டரில் ஒரு செய்தி வெளியிட்டிருந்தார் கேஜ்ரிவால். அதில், குடிநீர் அறிவிப்பு இன்று வெளியிடப்பட வேண்டும். இன்று அலுவலகம் போக வேண்டியது முக்கியமானது. இருப்பினும் இந்த நேரம் பார்த்து உடம்பு சரியில்லாமல் போயு்ளது என்று கூறியிருந்தார்.

டெல்லிவாசிகளுக்கு தினசரி வீட்டுக்கு 700 லிட்டர் குடிநீர் இலவசமாக வழங்கப்படும் என்பது ஆம் ஆத்மியின் தேர்தல் வாக்குறுதியாகும். இதை இன்று நிறைவேற்றவுள்ளார் கேஜ்ரிவால்.
ஆட்டோவில் வந்த ராக்கி பிர்லா
இதற்கிடையே, இன்று காலை இளம் அமைச்சரான ராக்கி பிர்லா, தனது அலுவலகத்துக்கு சாதாரணமான முறையில் ஆட்டோவில் வந்து இறங்கினார். வழக்கமான தனது வேலைகளை அவர் இன்று பார்த்தார்.
விஐபி கலாச்சாரத்திற்கு கேஜ்ரிவால் ஏற்கனவே முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அனைத்து அமைச்சர்களும் சாதாரணமான முறையில்தான் செயல்பட வேண்டும் என்று அவர் உத்தரவிட்டுள்ளார். விஐபி போல யாரும் செயல்படக் கூடாது என்றும் அவர் அறிவித்துள்ளார்.
எஸ்கார்ட் வாகனத்தைக் கூட அவர் அனுமதிக்கவில்லை. இதனால் அமைச்சர்கள் மற்றும் கேஜ்ரிவால் ஆகியோர் மிகவும் சாதாரணமான முறையில் வளைய வந்து கொண்டுள்ளனர்.
இந்த வாரம் பூராவும் கேஜ்ரிவால் பிசி
இந்த வாரம் முழுவதும் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட வேண்டிய நிலையில் இருக்கிறார் கேஜ்ரிவால். அத்தனையும் தேர்தல் சமயத்தின்போது அவர் அளித்த வாக்குறுதிகளாகும்.
மின் கட்டணக் குறைப்பு அதில் முக்கியமானது. இன்று குடிநீர் தொடர்பான அறிவிப்பு வெளியாகிறது.
அதேபோல 10 சதவீத மின் உயர்வுக் கட்டணம் ஜனவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று ஏற்கனவே இருந்த அரசு அறிவித்திருந்தது. அதை நிறுத்தும் முடிவை நாளை கேஜ்ரிவால் அரசு வெளியிடும் என்று தெரிகிறது.
அதேபோல சிஎன்ஜி கட்டண உயர்வையும் அவர் குறைத்தாக வேண்டிய நிலையில் இருக்கிறார். இதன் மூலம் ஆட்டோக்களில் பயணம் செய்யும் சாமானிய மக்கள் பலன் அடைவார்கள்.
ஆட்டோ டிரைவர்களில் பலர் ஆம் ஆத்மியின் தொண்டர்கள் என்பதால் இதைச் செய்தாக வேண்டிய நிலையில் கேஜ்ரிவால் இருக்கிறார்.
நாளை மின் கட்டணக் குறைப்பை அறிவிக்கும் கேஜ்ரிவால், அடுத்தடுத்து மக்களுக்கு சந்தோஷம் கொடுக்கும் அறிவிப்புகளைச் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications