சூடுபிடித்த ஆந்திர அரசியல் களம்.. ஜெகன் மோகன் மீது குற்றச்சாட்டுகளை அடுக்கும் பாஜக கூட்டணி!
அமராவதி: ஆந்திராவில் தேர்தல் பரப்புரை சூடு பிடித்து வரும் நிலையில், முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி மீது பாஜக கூட்டணியான டிடிபி மற்றும் ஜன சேனா தலைவர்கள் கடும் விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.
ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள 175 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும், 25 லோக்சபா தொகுதிகளுக்கும் மே 13ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. இந்த முறை ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி ஷர்மிளா காங்கிரஸில் இணைந்துள்ளதால் ஆந்திர மாநில களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. ஏற்கெனவே காங்கிரஸ் கட்சிக்கு இருந்த செல்வாக்கும், ராஜசேகர ரெட்டிக்கு இருந்த செல்வாக்கையும் மீட்டெடுக்க காங்கிரஸ் முனைந்து வருகிறது.

மறுபுறம் பாஜக மற்றும் பவன் கல்யாணுடன் கைகோர்த்து ஆட்சியை பிடிக்க சந்திரபாபு நாயுடு முயன்று வருகிறார். ஆந்திராவின் அரசியல் சாணக்கியர் என்று அழைக்கப்படும் சந்திரபாபு நாயுடு இந்த முறை எப்படியாவது ஆட்சியை பிடித்துவிடுவது என்று தீவிரமாக திட்டமிட்டிருக்கிறார். இதற்கு பாஜகவும், பவன் கல்யாணும் உதவுவார்கள் என்று நம்பியுள்ளார்.
இருப்பினும் இவர்களுக்கு டஃப் கொடுக்க முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தனது தந்தையின் பாணி அரசியலை கையில் எடுத்திருக்கிறார். ஆந்திராவுக்கு ஜெகன் ஏன் தேவை என்கிற கோஷத்தை முன்வைத்து இந்த தேர்தலை எதிர்கொண்டு வருகிறார். தன்னுடைய கடந்த கால ஆட்சி, தந்தை வழி அரசியல் ஆகியவை தனக்கு கைகொடுக்கும் என்று அவர் எதிர்பார்த்திருக்கிறார்.
ஆனாலும், பாஜக கூட்டணி கட்சிகள் பிரசாரத்தை கூர்மைப்படுத்தி உள்ளன. முதலீடே இல்லாததால் ஆந்திராவில் வளர்ச்சியே ஏற்படவில்லை என்று பாஜக குற்றம்சாட்டியுள்ளது.
"ஜெகனின் ஆந்திரா ஊழலில் அழுகிய மாநிலமாக மாறியிருக்கிறது. நாங்கள் ஜெகனின் தோல்விகளை பொதுமக்களுக்கு அம்பலப்படுத்தி வருகிறோம். இந்த 5 ஆண்டுகளில் அவரது ஆட்சியில் சாலைகள் கூட முழுமையாக போடப்படவில்லை. நில உரிமைச் சட்டம் மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. நிலம் வைத்திருப்பவர்களின் பட்டா புத்தகத்தில் ஜெகனின் போட்டோ பதிவிடப்பட்டிருந்ததுதான் இந்த கொந்தளிப்புக்கு காரணம்.
நிலம் அதன் உரிமையாளர்களுடையதா? அல்லது ஜெகனுடையதா? என்கிற கேள்வியை இந்த சம்பவம் எழுப்பியுள்ளது. தனது போட்டோவை மக்களின் ஆவணங்களில் பிரிண்ட் செய்வதும், அரசு கட்டிடங்களுக்கு ஒய்எஸ்ஆர் கட்சி நிறத்தில் பெயிண்ட் அடிப்பதையும்தான் ஜெகன் மோகன் செய்து வருகிறார். டிரோன் வீடியோக்களை வெளியிட்டு, திரைப்பட ஷோக்களை போல தன்னுடைய பிரசாரத்தை அவர் நடத்தி வருகிறார்.
அவரது சமீபத்திய பேச்சுகளை கவனித்து பார்த்தால், அதில் தோல்வியின் சாயல் தெரிகிறது. அவரது தோல்வியை அவரே ஒப்புக்கொண்டிருக்கிறார். செய்தி ஊடகங்களுக்கு அவர் அளித்த பேட்டி அவருக்கே பேக் ஃபயரை ஏற்படுத்தியிருக்கிறது. விசாகப்பட்டினத்தை தலைநகராக தேர்ந்தெடுப்பது பற்றிய அவரது விளக்கங்கள் ஏற்றுக் கொள்ளக்கூடிய வகையில் இல்லை.
மூன்று தலைநகரங்களை உருவாக்குவது குறித்து அவர் அளித்த வாக்குறுதியில் ஒன்றை கூட நிறைவேற்றவில்லை. எனவே அவரது வார்த்தைகள் மீதான நம்பகத்தன்மை கேள்விக்குள்ளாகி உள்ளது. புதிய கட்டுமானங்களுக்கு பதில் பழிவாங்கும் நடவடிக்கையாக சில கட்டிடங்ளை அவர் இடித்திருக்கிறார். ஜெகனின் ஃபாலோவர்கள் அவர்களது யூடியூப் சேனல்களுக்கு நேர்காணல் கொடுத்ததற்காக சிலாகிக்கிறார்கள். ஆனால், ஜெகன் கடந்த 5 ஆண்டுகளில் மக்களை நேரில் சந்திக்கவில்லை" என்று பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளும், அதன் தலைவர்களும் விமர்சித்துள்ளனர்.
இந்த சட்டமன்ற தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் 175 இடங்களிலும் தெலுங்கு தேசம் கட்சி 144 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. ஜனசேனா 21, பாஜக 10 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. காங்கிரஸ் கட்சி 159 இடங்களிலும் சிபிஎம் 8, சிபிஐ 8 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. இந்த முறையும் ஜெகன் மோகன் ரெட்டிதான் ஆட்சியை பிடிப்பார் என்று கருத்துக் கணிப்புகளும் தெரிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications