அசோக் கெலாட்.. வசுந்தரா ராஜி.. சச்சின் பைலட்.. அடுத்த ராஜஸ்தான் முதல்வர் யார்? வெளியான சர்வே முடிவு
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் மீண்டும் யார் முதல்வராக வர வேண்டும் என்ற கேள்வியுடன் கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. தற்போதைய காங்கிரஸ் முதல்வர் அசோக் கெலாட், முன்னாள் பாஜக முதல்வர் வசுந்தரா ராஜி சிந்தியா மற்றும் காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் இடையே நடந்த கடும் போட்டியின் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது.
ராஜஸ்தானில் மொத்தம் 200 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில் ஒரு கட்சி வெற்றி பெற வேண்டும் என்றால் 101 இடங்களில் வெற்றி பெற வேண்டும். தற்போது அங்கு காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக அசோக் கெலாட் உள்ளார்.

கடந்த 2018 ல் தேர்தல் நடந்து முடிந்தது. தற்போது 5 ஆண்டு சட்டசபை காலம் முடிவுக்கு வர உள்ளது. இதனால் ராஜஸ்தானுக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தானில் நவம்பர் 25ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த தேர்தலில் பதிவாகும் ஓட்டுகள் பிற மாநிலங்களை போல் டிசம்பர் 3ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. ராஜஸ்தானை பொறுத்தவரை காங்கிரஸ்-பாஜக இடையே நேரடி போட்டி நிலவி வருகிறது. ஆட்சியை தக்கவைக்க காங்கிரஸ் கட்சி முயற்சித்து வருகிறது. அதேபோல் பாஜக தலைவர்களும் காங்கிரஸை வீழ்த்தி அரியணை ஏறும் வகையில் தீவிரமாக களப்பணியை தொடங்கி உள்ளது.
இந்நிலையில் தான் ராஜஸ்தான் சட்டசபை தேர்தல் தொடர்பாக ‛கிரவுண்ட் ஜீரோ ரீசர்ஜ்' எனும் அமைப்பு கருத்து கணிப்பு மேற்கொண்டுள்ளது. இந்த கருத்து கணிப்பு என்பது செப்டம்பர் 15ம் தேதி முதல் அக்டோபர் 5ம் தேதி வரை மொத்தம் 80 தொகுதிகளை மையப்படுத்தி மேற்கொள்ளப்பட்டது. ராஜஸ்தான் முதல்வராக யார் வர வேண்டும்? என்பது குறித்து மக்களிடம் கருத்து கணிப்பு மேற்கொள்ளப்பட்டது.
இந்த கருத்து கணிப்பின் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது. இதில் பாஜகவின் முன்னாள் முதல்வரான வசுந்தரா ராஜி சிந்தியா மற்றும் காங்கிரஸ் கட்சியின் சச்சின் பைலட் உள்ளிட்டவர்கள் பின்தங்கி உள்ளனர். மாறாக அதிகமான மக்கள் காங்கிரஸ் கட்சியின் தற்போதைய முதல்வர் அசோக் கெலாட் தான் மீண்டும் முதல்வராக வர வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்த கருத்து கணிப்பின்படி அசோக் கெலாட் முதல்வராக வேண்டும் என 33 சதவீதத்தினர் தெரிவித்துள்ளனர். அதேவேளையில் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜி சிந்தியாவுக்கு 29 சதவீதம் பேரும், காங்கிரஸ் கட்சியின் தலைவரான சச்சின் பைலட்டுக்கு 16 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதுதவிர பாஜகவில் இருந்து யாராவது ஒரு தலைவர் என 16 சதவீதம் பேரும், காங்கிரஸ் கட்சியில் இருந்து ஏதாவது ஒரு தலைவர் என 5 சதவீதம் பேரும், மற்றவர்கள் என 3 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications