'அஸ்ஸாம் அற்புதம்மாள்'- தேசதுரோக வழக்கில் சிறையில் மகன் அகில் கோகாய்- தேர்தலில் ஜெயிக்க வைத்த தாய்
குவஹாத்தி: தமிழகத்தில் ராஜீவ் கொலை வழக்கில் 29 ஆண்டு காலம் சிறைவாசம் அனுபவித்து வரும் மகனை மீட்க போராடுகிற அற்புதம்மாளை நினைவூட்டுகிறார் அஸ்ஸாமின் 84 வயதான பிரியாடா கோகாய். சி.ஏ.ஏ.வை எதிர்த்த ஒற்றை காரணத்துக்காக தேசதுரோக வழக்கில் சிறைவாசம் அனுபவித்து வரும் மனித உரிமை போரால அகில் கோகாயை தேர்தலில் போட்டியிட வைத்து வெற்றி பெற வைத்திருக்கிறார் பிரியாடா கோகாய்... ஆம் அஸ்ஸாம் மாநிலத்து அற்புதம்மாள்தான் இவர்.
அஸ்ஸாம் சட்டசபை தேர்தலில் பாஜக 78 இடங்களையும் காங்கிரஸ் கூட்டணி 46 இடங்களயும் கைப்பற்றி உள்ளன. அஸ்ஸாம் மாநிலத்தில் பாஜக ஆட்சியை தக்க வைத்துள்ளது.
அஸ்ஸாம் வரலாற்றிலேயே முதல் முறையாக சிறையில் இருந்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார் மனித உரிமைப் போராளி அகில் கோகாய். மத்திய பாஜக அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு (சி.ஏ.ஏ) நாடு முழுவதும் தீவிரப் போராட்டம் நடைபெற்றது.

ஊபா சட்டம்
அஸ்ஸாமில் மிக உக்கிரமாக நடந்த இந்தப் போராட்டத்தை முன்னெடுத்தவர்களில் அகில் கோகாய் ஒருவர். இந்த போராட்டங்களை ஒடுக்கும் வகையில் அகில் கோகாய், தேசிய புலனாய்வு ஏஜென்சியால் கைது செய்யப்பட்டார். அவர் மீது தேசதுரோக வழக்கு உள்ளிட்ட 13 வழக்குகள் பாய்ந்தன. ஊபா எனப்படும் பயங்கரவாத தடுப்பு சட்டமும் பாய்ந்தது.

சட்டசபை தேர்தல் போட்டி
இதற்காக அகில் கோகாய், அவரது குடும்பத்தினர் சோர்ந்து எல்லாம் போய்விடவில்லை. சட்டசபை தேர்தலில் தாம் தொடங்கிய ரைஜோர் தள கட்சியின் சார்பாக சிவ்சாகர் தொகுதியில் போட்டியிட்டார் அகில் கோகாய். அவருக்காக 84 வயது தாயார் பிரியாடா கோகாய் தொகுதி முழுவதும் தீவிர பிரசாரம் செய்தார்.

மோடி எதிர்ப்பு பிரசாரம்
பிரியாடா கோகாய்க்கு மேதா பட்கர் உள்ளிட்ட சமூக செயற்பாட்டாளர்கள் அஸ்ஸாம் வந்து பிரசாரம் செய்தனர். அகில் கோகாய்க்கு எதிராக பாஜகவின் சுபமித்ரா கோகாய் போட்டியிட்டார். அவருக்காக பிரதமர் மோடி பிரசாரம் செய்தார். சிறைவாசம் அனுபவித்து வந்ததால் அகில் கோகாய் பிரசாரமே செய்யவில்லை.

அகில் கோகாய் வெற்றி
ஆனால் சட்டசபை தேர்தலில் சுமார் 12 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அகில் கோகாய் வென்றார். இத்தனைக்கும் அகில் கோகாய், ஆர்.எஸ். எஸ். சேர வேண்டும்; பாஜகவில் சேர்ந்தால் அமைச்சர் பதவி கொடுப்போம் என்றெல்லாம் தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகளே பேரம் பேசியதாகவும் சர்ச்சை வெடித்தது. இந்த பேரத்துக்கு பணிந்து போகாததாலேயே தமக்கு ஜாமீன் தரவில்லை எனவும் அகில் கோகாய் குற்றம்சாட்டியிருந்தார்.

செய்த குற்றம் என்ன?
இத்தனை ஒடுக்குமுறைக்கு மத்தியில் மகனை வெற்றி பெற வைத்திருக்கிறார் பிரியாடா கோகாய். இது தொடர்பாக பிரியாடா கோகாய் கூறுகையில், என் மகன் என்ன தவறு செய்தான் என சிறையில் அடைத்துள்ளீர்கள்? அப்படி பெரிய குற்றம் செய்திருந்தால் தயவு செய்து என் மகனை சுட்டுப் படுகொலை செய்துவிடுங்கள் என்றுதான் அரசாங்கத்தை கேட்கிறேன் என் அதிர வைக்கிறார். மேலும் என் மகன் விடுதலை செய்யப்பட வேண்டும்; என் மகன் சுதந்திரமாக நடமாட வேண்டும் என்பதற்காகவே தேர்தலில் வயதையும் பொருட்படுத்தாமல் பிரசாரம் செய்தேன் என்கிறார் பிரியாடா கோகாய்.

அற்புதம்மாள்- பேரறிவாளன்
தமிழ்நாட்டில் 1991-ம் ஆண்டு ராஜீவ் படுகொலையான போது விசாரணைக்காக சிபிஐ அதிகாரிகளிடம் பேரறிவாளன் எனும் இளைஞன் ஒப்படைக்கப்பட்டார். அந்த இளைஞன் 29 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்து தூக்கு மேடைக்கு போய் திரும்பியும் இருக்கிறார். இந்த 29 ஆண்டுகாலம் மகனுக்கு நீதி கேட்டு, மகனின் விடுதலைக்காக இந்தியாவின் நாலா திசையும் தமிழ் நிலத்தின் குறுக்கும் கெடுக்குமான இடைவிடாத பயணத்தை இன்றும் நடத்திக் கொண்டிருக்கிறார் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள். அவரது தியாக வாழ்வை நினைவூட்டுவதாக இருக்கிறது அஸ்ஸாம் அற்புதம்மாள் எனப் போற்றப்படுகிற பிரியாடா கோகாயின் இந்த பெருவாழ்வு.












Click it and Unblock the Notifications