அசாமில் வசிக்கும் 2 பேர் வங்கதேசத்துக்கு நாடு கடத்தல்? கவுஹாத்தி உயர்நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு
கவுஹாத்தி: அசாம் மாநிலம் கம்ரூப் மாவட்டத்தில் வசிக்கும் 2 பேரை மே 25ம் தேதி போலீசார் அழைத்து சென்ற நிலையில் தற்போது இருவர் பற்றியும் எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. அதோடு 2 பேரையும் வங்கதேசத்துக்கு அனுப்பும் வாய்ப்பு உள்ளதாக கூறி குடும்பத்தினர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் இருவரும் எங்கு உள்ளனர் என்பது பற்றிய விவரங்களை வழங்க மத்திய அரசு அசாம் காவல்துறை, மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அசாம் மாநிலம் கம்ரூப் மாவட்டத்தை சேர்ந்தவர் அபு பக்கர் சித்திக் மற்றும் அக்பர் அலி. இவர்கள் 2 பேரும் இந்தியர்கள் அல்ல. வெளிநாட்டை சேர்ந்தவர்கள் என்று மாநில வெளிநாட்டவர்கள் தீர்ப்பாயம் கடந்த 2017 ம் ஆண்டில் அறிவித்தது.

அதன்பிறகும் கூட அபு பக்கர் சித்திக், அக்பர் அலி ஆகியோர் தங்களின் குடும்பத்துடன் வசித்து வந்தனர். இதற்கிடையே தான் கடந்த மே 25ம் தேதி அவர்கள் 2 பேரையும் விசாரணைக்காக அசாம் போலீசார் அழைத்து சென்றனர்.
அதன்பிறகு அபு பக்கர் சித்திக், அக்பர் அலி பற்றிய எந்த விவரங்களும் தெரியவில்லை. உறவினர்கள் மற்றும் வழக்கறிஞர்களால் அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதையடுத்து உறவினர் தொரப் அலி என்பவர் கவுஹாத்தி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், ‛‛அபு பக்கர் சித்திக் மற்றும் அக்பர் அலி ஆகியோர் வங்கதேசத்துக்கு சட்டவிரோதமாக நாடு கடத்தப்படும் அபாயம் உள்ளது. இவர்கள் 2 பேரும் மே 25ம் தேதி போலீசார் அழைத்து சென்றனர். அதன்பிறகு அவர்களை குடும்பத்தினர் சந்திக்க முடியவில்லை. வழக்கறிஞர்களும் சந்திக்கவில்லை.
இருவரின் நிலை என்னவென்று தெரியவில்லை. இதனால் அவர்களின் நிலை என்னவென்று தெரியவில்லை'' என்று கூறப்பட்டு இருந்தது.
இதுபற்றி கவுஹாத்தி உயர்நீதிமன்றம் நேற்று விசாரணை மேற்கொண்டது. நீதிபதிகள் கல்யாண் ராய் சுரானா மற்றும் மலஸ்ரீ நந்தா ஆகியோர் அமர்வு விசாரணை நடத்தியது.
காவல்துறை சார்பில் ஆஜரான பயாங், ‛‛இருவரும் எல்லை பாதுகாப்பு போலீசின் கட்டுப்பாட்டில் உள்ளனர்'' என்று கூறினார். இதை கேட்ட நீதிபதிகள், ‛‛அவர்கள் 2 பேரின் நிலை குறித்தும், அவர்கள் எங்கு தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்பது பற்றியும் மனுதாரருக்கு தெரிவிக்க வேண்டும்'' என்று கூறி மத்திய அரசு, அசாம் மாநில அரசு, அசாம் போலீசார் மற்றும் மாவட்ட நிர்வாகத்துக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டார்.
தற்போது நம் நாட்டில் இருந்து சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வங்கதேசத்தினர் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை சட்டவிரோதமாக வந்த வங்கதேசத்தினர் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். இவர்கள் திரிபுராவின் எல்லையில் இருந்து வங்கதேசத்துக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் தான் இவர்கள் 2 பேரையும் வங்கதேசத்துக்கு அனுப்பலாம் என்று பயந்து உறவினர் தாக்கல் செய்த மனுவில் இருவரின் நிலை பற்றிய விவரத்தை அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications