ஆம் ஆத்மி கட்சியிடம் இருந்து பாடம் கற்போம்: ராகுல் காந்தி
டெல்லி: "சாமானிய மக்களுடன் எப்படி ஈடுபாட்டுடன் இணைந்து செயல்படுவது என்பது பற்றி ஆம் ஆத்மி கட்சிக்கு கிடைத்த வெற்றியில் இருந்து பாடம் கற்றுக் கொள்வோம்" என்று காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி கூறி உள்ளார்.
டெல்லி, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஷ்கார் ஆகிய 4 மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும் தோல்வியை சந்தித்து உள்ளது.
இந்த 4 மாநிலங்களிலும் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி தீவிர பிரசாரம் செய்தார். இந்த நிலையில் தேர்தல் முடிவு குறித்து நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ராகுல்காந்தி கூறியதாவது:
இந்த தேர்தல் மூலம் மக்கள் எங்களுக்கு ஒரு செய்தியை சொல்லி இருக்கிறார்கள். அதை நாங்கள் இதயபூர்வமாகவும், மனப்பூர்வமாகவும் ஏற்றுக் கொள்கிறோம்.

பாடம் கற்போம்
சாமானிய மக்களின் குரலுக்கு அரசியல் கட்சிகள் சரியாக செவி சாய்க்கவில்லை என்றே கருதுகிறேன். சாமானிய மக்களுடன் எப்படி ஈடுபாட்டுடன் இணைந்து செயல்படுவது என்பது பற்றி ஆம் ஆத்மி கட்சிக்கு கிடைத்த வெற்றியில் இருந்து பாடம் கற்றுக் கொள்வோம். அதை நாங்கள் சிறப்பாகவும் செய்வோம்.

மாறுபட்ட சிந்தனை
பெரிய கட்சிகளின் வழக்கமான அரசியல் அணுகுமுறையில் மாறுபட்ட அணுகுமுறை, சிந்தனையை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை ஆம் ஆத்மி கட்சிக்கு கிடைத்த வெற்றி உணர்த்தி இருக்கிறது. பாரம்பரியமான அரசியல் கட்சிகளின் மீது ஈடுபாடு காட்டாத மக்கள் ஆம் ஆத்மி கட்சியின் மீது ஈடுபாடு கொண்டு இருப்பதாக கருதுகிறேன்.

சுயபரிசோதனை அவசியம்
இந்த தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்கான பல்வேறு காரணங்களை நாங்கள் ஆய்வு செய்வோம். எங்களை நாங்களே ஆழ்ந்த சுயபரிசோதனை செய்து கொள்ளவேண்டிய அவசியத்தை இந்த தேர்தல் முடிவுகள் ஏற்படுத்தி இருக்கின்றன.

மக்களுக்கு அதிகாரம்
அரசியலில் மக்களுக்கு அதிகாரம் வழங்குவது தீவிரமாக சிந்திக்க வேண்டிய தேவை ஏற்பட்டு உள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர்களுடன் ஆலோசிக்க இருக்கிறேன்.

இளைஞர்களின் சக்தி
நரேந்திர மோடியை பற்றி கேட்கிறீர்கள். அவர் பாரதீய ஜனதா கட்சியின் தலைவர். அவர்கள் அவர்களுடைய பணியை செய்கிறார்கள். காங்கிரஸ் கட்சி தொலைநோக்கு பார்வையுடன் நாட்டை முன்னெடுத்துச் செல்ல விரும்புகிறது. இளைஞர்களின் சக்தியை பயன்படுத்தி நாட்டை மேம்படுத்த வேண்டும். மக்களின் விரும்பங்களை அறிந்து அவற்றை பூர்த்தி செய்யும் வகையில் காங்கிரசின் செயல்பாடுகள் இருக்கும் என்றார் ராகுல் காந்தி.

படுதோல்வி
2014ம் ஆண்டு நடைபெற இருக்கும் லோக்சபா தேர்தலில் பாரதீய ஜனதா தனது பிரதமர் வேம்பாளராக நரேந்திர மோடியை அறிவித்து இருப்பது போல், காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தியை முன்னிலைப்படுத்தி பேசி வருகிறார்கள். ஆனால் மேற்கண்ட 4 மாநிலங்களிலும் ராகுல் காந்தி தீவிர பிரசாரம் செய்தும், காங்கிரஸ் தோல்வி அடைந்து விட்டது. அத்துடன் டெல்லியிலும், ராஜஸ்தானிலும் ஆட்சியையும் இழந்து விட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications