"ஆல் ரவுண்டர்களின் எழுச்சி" பிட்ச்சில் எந்த பிரச்சினையும் இல்ல.. அணித் தேர்விலேயே சொதப்பிய ஆஸி!
ஆஸி. அணியின் டிராவிஸ் ஹெட் மற்றும் அகர் ஆகியோரை தேர்வு செய்யாதது விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.
நாக்பூர்: பார்டர் - கவாஸ்கர் டிராபியின் முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நேற்று நாக்பூரில் தொடங்கியது. முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி ஜடேஜா மற்றும் அஸ்வின் சுழலில் சிக்கி 177 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது.
இதனைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 77 ரன்கள் எடுத்தது. இதனைத் தொடர்ந்து இரண்டாம் நாள் ஆட்டத்தில் ரோகித் சர்மாவின் அபார சதம், ஜடேஜா மற்றும் அக்சர் படேல் ஆகியோரின் அரைசதம் காரணமாக 144 ரன்கள் முன்னிலையுடன் 7 விக்கெட்டுகளை இழந்து 321 ரன்கள் எடுத்துள்ளது.
3ம் நாள் ஆட்டம் நாளை தொடங்க உள்ள நிலையில், இந்திய அணி ஏற்கனவே ஆஸ்திரேலிய அணியின் நம்பிக்கையை சுக்குநூறாக்கியுள்ளது. இந்தப் போட்டி தொடங்குவதற்கு முன் நாக்பூர் பிட்ச் பற்றிய எக்கச்சக்க விவாதங்களை ஆஸ்திரேலிய அணி வீரர்களும், முன்னாள் வீரர்களும், அந்நாட்டு மீடியாக்களும் பேசத் தொடங்கின.

டர்னர் பிட்ச்
"ரேங்க் டர்னர் பிட்ச்" என்று ஆஸ்திரேலியா கிளப்பிவிட்ட நிலையில், அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. இந்தியாவில் வழக்கம் போல் தயாரிக்கப்படும் பிட்ச் என்பது இந்திய பந்துவீச்சின் போதே தெளிவானது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி வீரர்களுக்கு இருக்கும் சுழல் பந்துவீச்சு பிரச்சினையை மறைக்க, பிட்ச் மீது குற்றம்சாட்டியது நிரூபணமானது. ஒவ்வொரு முறையும் மோசமான கிரிக்கெட்டை ஆடிவிட்டு, பிட்ச் மீது பழி போடும் ஆஸ்திரேலிய அணியால் இம்முறை எந்த குற்றச்சாட்டும் வைக்க முடியவில்லை.

டிராவிஸ் ஹெட்
ஆஸ்திரேலியா பேட்டிங் செய்த அதே பிட்ச்சில் ரோகித் சர்மா சதம் விளாசியதோடு, இந்திய அணியில் இருக்கும் இரு இடதுகை பேட்ஸ்மேன்களும் அரைசதம் கடந்துள்ளனர். இதற்கு ஆஸ்திரேலியா அணியின் அணித் தேர்வு காரணம் என்று பார்க்கப்படுகிறது. ஐசிசி தரவரிசையில் நான்காம் இடத்தில் இருக்கும் ஹெட்டை வெளியில் அமர வைத்துவிட்டு, ரென்ஷாவை களமிறக்கியது எவ்வளவு தவறு என்பது நேற்றே தெரிய வந்தது.

ஆஸி. செய்த முக்கிய தவறு
அதுமட்டுமல்லாமல் இந்திய அணி நிச்சயம் மூன்று சுழற்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கும் என்று தெரிந்தும், ஆஸ்திரேலியா அணி இரு சுழற்பந்துவீச்சாளர்களுடன் மட்டும் களமிறங்கியது, அந்த அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. அதுமட்டுமல்லாமல் மொத்தமாக 4 பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கினர். கீழ்நிலையில் ஆடும் பேட்ஸ்மேனை விலக்கி வைத்து, ஆஸ்டன் அகருடன் களமிறங்கி இருந்தால், நிச்சயம் இந்திய அணி பேட்ஸ்மேன்களுக்கு பெரும் சவாலாக இருந்திருக்கும்.

குல்தீப் யாதவ் vs அக்சர் படேல்
அதேபோல் நல்ல தொடக்கம் கிடைத்தும் இந்திய அணியின் மிடில் ஆர்டர் வீரர்கள் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஆனால் ஆல் ரவுண்டர்களான அஸ்வின், ஜடேஜா மற்றும் அக்சர் படேல் ஆகியோர் இந்திய அணி முன்னிலை பெறுவதற்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளனர். போட்டிக்கு முன்பாக குல்தீப் யாதவ் இந்திய அணியில் சேர்க்கப்பட வேண்டும் என்று ஏராளமானோர் கருத்து கூறினர்.

ஆஸி. பேட்டிங்
ஆனால் அக்சர் படேலின் பேட்டிங் திறமையை கணக்கில் கொண்டு இந்திய அணி நிர்வாகம் கொடுத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திக் கொண்டார். பந்துவீச்சில் விக்கெட்ட் வீழ்த்தாவிட்டாலும் கட்டுக்கோப்பாக வீசிய அக்சர் படேல், பேட்டிங்கில் அசத்தியுள்ளார். இது இந்திய அணியின் அணித் தேர்வுக்கு கிடைத்த வெற்றியாகவே பார்க்கப்படுகிறது. இரண்டாம் நாள் முடிவில் இந்திய அணி பெரிய முன்னிலையை பெற்றுள்ள நிலையில், நாளைய ஆட்டத்தில் ஆஸி. அணி பேட்டிங்கில் சொதப்பினால் இந்திய அணியின் வெற்றி உறுதி.












Click it and Unblock the Notifications