ராமர் கோவில் கட்ட முக்கிய காரணம் இவர்தான்! அறக்கட்டளை தலைவர் மகனுக்கு பாஜகவின் ‛பெரிய கிப்ட்’! ஆஹா
அயோத்தி: அயோத்தி ராமர் கோவில் கட்ட முக்கிய காரணமாக இருந்த நபருக்கு பாஜக பெரிய கிப்ட் வழங்கி உள்ளது. அதாவது அயோத்தி ராமர் அறக்கட்டளையின் கட்டுமான பிரிவு தலைவரான நிருபேந்திர மிஸ்ராவின் மகனுக்கு வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட பாஜக வாய்ப்பு வழங்கி உள்ளது. இந்நிலையில் தான் பிரதமர் மோடிக்கு மிகவும் நெருக்கமான நிருபேந்திர மிஸ்ரா யார்? என்பது பற்றிய பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. மொத்தம் 195 தொகுதிகளுக்கு பாஜக தலைமை வேட்பாளர்களை அறிவித்தது. அதிகபட்சமாக உத்தர பிரதேசத்தில் 51 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.

அதன்படி பிரதமர் மோடி உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். ராஜ்நாத் சிங் மீண்டும் லக்னோ தொகுதியிலும் களமிறங்கி உள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குஜராத் மாநிலம் காந்தி நகர் தொகுதியில் மீண்டும் போட்டியிட உள்ளார்.
இந்நிலையில் தான் அயோத்தி ராமர் கோவில் கட்டுமான பணியை வெற்றிகரமாக முடித்து கொடுத்தவரின் மகனுக்கு வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக போட்டியிட வாய்ப்பு வழங்கி உள்ளது. அதாவது ஐஏஎஸ் அதிகாரியாக உத்தர பிரதேசத்தில் வேலை செய்தவர் நிருபேந்திர மிஸ்ரா. 1967 ம் ஆண்டின் பேட்ஜ்ஜை சேர்ந்த இவர் உத்தர பிரதேசம் மற்றும் மத்திய அரசில் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்தார்.
ஐஏஎஸ் அதிகாரியாக ஓய்வு பெற்ற நிலையில் பிரதமர் மோடி அரசு அமைந்த பிறகு அவரது அலுவலகத்தில் முதன்மை செயலாளராக பணியாற்றினார். பிரதமர் மோடிக்கும், இவருக்கும் நெருக்கமான உறவு உள்ளது. அதேபோல் பிற பாஜக தலைவர்களுடன் அவருக்கு நல்ல உறவு உள்ளது. இத்தகைய சூழலில் தான் 2020ல் அயோத்தி ராமர் கோவில் கட்டும் அறக்கட்டளையான ஸ்ரீராம ஜென்ம தீர்த்த அறக்கட்டளையில் கட்டுமான பிரிவு தலைவராக நிருபேந்திர மிஸ்ரா நியமனம் செய்யப்பட்டார்.
இவர் மேற்பார்வையில் தான் அயோத்தி ராமர் கோவில் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த ஜனவரியில் அயோத்தி ராமர் கோவிலின் கும்பாபிேஷகம் நடக்க நிருபேந்திர மிஸ்ராவும் மிக முக்கிய காரணம். கடைசி நேரத்தில் பணிகளை விரட்டி வாங்கி வெற்றிகரமாக கோவில் பணியை முடித்து பிரதமர் மோடியை வைத்து குறித்த தேதியில் திறந்து வைத்துள்ளார். தற்போது தினமும் பக்தர்கள் ராமர் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்து வருகின்றனர்.
மேலும் பாஜகவின் முக்கிய தேர்தல் வாக்குறுதியான அயோத்தி ராமர் கோவில் கட்டுவோம் என்பது தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் நிருபேந்திராவின் மகனுக்கு வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நிருபேந்திர மிஸ்ராவின் மகன் சாகேத் மிஸ்ரா பாஜகவில் செயல்பட்டு வருகிறார். இவர் யூபிஎஸ்சியில் தேர்ச்சி பெற்று ஐபிஎஸ் ஆனார். உத்தர பிரதேசத்தில் பணி நியமனம் செய்யப்பட்டார்.
ஆனால் அவர் ஐபிஎஸ் பணியை ராஜினாமா செய்தார். அதன்பிறகு வங்கி அதிகாரியாக செயல்பட்ட சாகேத் மிஸ்ரா உத்தர பிரதேசத்தில் பாஜக சார்பில் எம்எல்சியாக(உத்தர பிரதேச மேல்சபை உறுப்பினர்) இருக்கிறார். இந்நிலையில் தான் வரும் நாடாளுமன்ற தேர்தலில் சாகேத் மிஸ்ராவுக்கு அங்குள்ள ஷ்ரவஸ்தி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட பாஜக வாய்ப்பு வழங்கி உள்ளது. நேற்று வெளியான பாஜகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் சாகேத் மிஸ்ரா ஷ்ரவஸ்தி தொகுதியில் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications