ஆந்திராவில் பந்த்… தனித் தெலுங்கானாவுக்கு எதிராக- மாநிலமே ஸ்தம்பிப்பு!
ஹைதராபாத்: தனித்தெலுங்கானா மசோதா நிறைவேற்றப்பட்டதால் சீமாந்திராவில் பந்த்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனால் கடையடைப்பு நடந்து வருகிறது. ஆந்திராவே போர்க்களமாக காணப்படுகிறது.
சீமாந்திராவில் கடையடைப்பு நடப்பதால் வேலூரில் இருந்து ஆந்திரா செல்லும் பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
லோக்சபாவில் தெலுங்கானா மசோதா நிறைவேற்றப்பட்டதன் எதிரொலியாக சித்தூர் மாவட்டத்தில் முழு அடைப்பு போராட்டம் தொடங்கியது. இதன் காரணமாக வேலூரில் இருந்து ஆந்திர மாநிலத்துக்கு செல்லும் பஸ்கள் நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

ஆர்ப்பாட்டம்- முழு அடைப்புப் போராட்டம்
ஆந்திர மாநிலத்தில் தனி தெலுங்கானா வேண்டும் என்று ஒரு பிரிவினரும், ஒன்றுபட்ட ஆந்திராவை வலியுறுத்தி ஒரு பிரிவினரும் போராட்டம், ஆர்ப்பாட்டம், முழு அடைப்பு போராட்டம் உள்பட பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

தெலுங்கானா மசோதா
இந்த நிலையில் நேற்று பாராளுமன்றத்தில் தெலுங்கானா மசோதா நிறைவேற்றப்பட்டது.அதனை தொடர்ந்து ஆந்திர முதல்வர் கிரண்குமார் மற்றும் எம்.எல்.ஏக்கள் இன்று ராஜினாமா செய்ய உள்ளனர்.

சித்தூரில் முழு அடைப்பு
இந்நிலையில் சித்தூர் மாவட்டத்தில் ஒன்றுபட்ட ஆந்திராவை வலியுறுத்தி முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஆந்திரா பஸ்கள் நிறுத்தம்
இந்த முழு அடைப்பு போராட்டம் காரணமாக வேலூரில் இருந்து ஆந்திர மாநிலமான சித்தூர், திருப்பதி, ஸ்ரீகாளஹஸ்தி, திருமலை போன்ற இடங்களுக்கு செல்லும் பஸ்கள், லாரிகள் உள்பட அனைத்து வாகனங்களும் நேற்று பகல் 3 மணி முதல் நிறுத்தப்பட்டன. தொடர்ந்து சீமாந்திரா பகுதியில் போராட்டம் தொடர்ந்து நடப்பதால் பஸ்கள் இன்றும் இயக்கபடவில்லை. தமிழக எல்லையான கிறிஸ்டியான் பேட்டையில் லாரிகள் மற்றும் கனரக வாகனங்கள் நிறுத்தப்பட்டு உள்ளன.

வேலூருடன் நிறுத்தம்
வேலூரில் இருந்து ஆந்திராவுக்கு செல்லும் ஆந்திர, தமிழக அரசு பஸ்கள் மற்றும் தனியார் பஸ்கள் செல்லாமல் வேலூர் புதிய பஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.

திருப்பதி பஸ் கிடையாது
பஸ்கள் ஆந்திர மாநிலம் திருப்பதி, சித்தூருக்கு செல்லாததால் பயணிகள் மற்றும் திருப்பதி செல்லும் பக்தர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

ரயில்களில் கூட்டம்
மேலும் சில பயணிகள் பஸ்கள் செல்லாததால் ரயில் மூலம் காட்பாடியில் இருந்து திருப்பதி, சித்தூருக்கு சென்றனர். இதனால் காட்பாடி ரெயில் நிலையத்திலும், சித்தூர் திருப்பதி ஆகிய இடங்களில் உள்ள ரயில் நிலையங்களிலும் பயணிகள் கூட்டம் அலைமோதியது.

வாகனங்கள் ஓடவில்லை
சித்தூர் திருப்பதியில் உள்ள வணிக வளாகங்கள், பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், சிறுவணிக கடைகள் ஆகிய அனைத்தும் இன்று மூடப்பட்டன. நகரில் ஆட்டோ, லாரி, வேன், கார், அரசு மற்றும் தனியார் பஸ்கள் ஓடவில்லை. கர்நாடகா, தமிழ்நாடு உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து சித்தூருக்கு வரும் பஸ்கள் உள்ளிட்ட இதர வாகனங்கள் சித்தூர் மாவட்ட எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டன.

போர்க்களம்
ஒருங்கிணைந்த ஆந்திர போராட்ட குழுவினர் சித்தூர் நகரில் உள்ள சாலைகளில் டயர்களை போட்டு தீ வைத்து கொளுத்தினர். அவர்கள், மத்திய அரசை கண்டித்தும், காங்கிரஸ் கட்சி தலைவர்களை விமர்சித்தும் ஆவேசமாக குரல் எழுப்பினர். இதனால் சித்தூர் ,திருப்பதி நகரம் மற்றும் சீமந்தரா முழுவதும் பற்றி எரிந்து களேபரமாக காட்சி அளிக்கிறது.












Click it and Unblock the Notifications