பெங்களூரில் பள்ளி வளாகத்தில் சிறுமி பலாத்காரம்: குற்றவாளிகளை நெருங்குகிறது போலீஸ்
பெங்களூர்: பள்ளி வளாகத்திலேயே அதன் ஊழியர்களால், 6 வயது மாணவி, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெங்களூரில் நடந்துள்ளது. பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குற்றவாளிகளை நெருங்கிவிட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
பெங்களூர் மாரத்தஹள்ளி பகுதியில், உள்ளது விப்ஜியார் (vibgyor)என்ற பள்ளி. சாப்ட்வேர் இன்ஜினியர் ஒருவரின் மகள் இங்கு முதலாம் வகுப்பு படித்து வருகிறாள். இரு தினங்களுக்கு முன்பு வீட்டுக்கு வந்த சிறுமி, தனது வயிற்றில் வலியிருப்பதாக பெற்றோரிடம் கூறியுள்ளார்.

டாக்டர் தகவல்
இதையடுத்து மருத்துவமனைக்கு சிறுமியை பெற்றோர் அழைத்து சென்று காண்பித்தபோது, பாலியல் பலாத்காரத்திற்கு சிறுமி உட்படுத்தப்பட்டுள்ளதாக டாக்டர் தெரிவித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் வர்த்தூர் காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்தனர்.

பள்ளி வளாகத்தில்
போலீசார் சிறுமியிடம் நடந்த சம்பவம் குறித்து விசாரித்தனர். அதற்கு, பள்ளியை சேர்ந்த இருவர்தான் இதுபோல செய்ததாக சிறுமி தெரிவித்தார். ஆயினும், அவர்களின் பெயர் சிறுமிக்கு தெரியவில்லை. எனவே பள்ளி வளாகத்திற்குள்தான் பலாத்காரம் நடந்திருக்க வேண்டும் என்று தெரியவந்துள்ளது.

ஆசிரியர் காரணமா?
சிறுமி கூறிய அங்க அடையாளங்கள், அந்த பள்ளியின் உடற்பயிற்சி ஆசிரியர் மற்றும் செக்யூரிட்டியுடன் ஒத்துப்போகிறது. இருப்பினும், உடற்பயிற்சி பிரிவில் 27 பேர் வேலை செய்துவருவதால், தவறு செய்தது யார் என்பதை கண்டறிய அனைத்து ஊழியர்களையும் சிறுமியின் முன்பு ஆஜர்படுத்தியுள்ளது போலீஸ்.

பெற்றோர்கள் முற்றுகை
இதனிடையே சம்பவம் குறித்து அறிந்த அப்பள்ளியில் படிக்கும் பிற மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டனர். பாதுகாவலர்களை தள்ளிவிட்டு பள்ளி வளாகத்திற்குள் புகுந்த பெற்றோர்கள், கண்ணாடி கதவுகளை உடைத்தும், சேர், நாற்காலியை தூக்கிப்போட்டு நொறுக்கியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பள்ளிக்கு விடுமுறை
பள்ளியின் நிறுவனரும், தலைவருமான, ரஸ்டம் கேரவல்லா உடனடியாக பெற்றோர் முன்பு வந்து பதில் கூற வேண்டும் என்று அவர்கள் கோஷமிட்டனர். பெண் குழந்தைகளை பெற்றவர்கள் பள்ளிக்கு அக்குழந்தையை அனுப்ப பயந்து வருவதாகவும் அவர்கள் ஆதங்கம் வெளிப்படுத்தினர். போராட்டத்தால் பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி விளக்கம்
போராட்டக்காரர்கள் முன்னிலையில் பேசிய ரஸ்டம் கேரவல்லா "குற்றவாளிகளுக்கு பள்ளி நிர்வாகம் பாதுகாப்பு அளிக்காது. குற்றவாளிகளை தூக்கில் போட்டாலும் அது பற்றி கவலையில்லை. நடந்த தவறுக்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். போலீசாருக்கு பள்ளி நிர்வாகம் முழு ஒத்துழைப்பையும் அளித்து வருகிறது. பள்ளியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி ரகசிய கேமராக்களின் பதிவான காட்சிகளை போலீசாரிடம் அளித்துள்ளோம். பெற்றோர் புகார் அளிக்க தனி இ-மெயில் ஐடி உருவாக்கப்படும்" என்று உறுதியளித்தார். இருப்பினும் போராட்டம் நடைபெற்ற பிறகே நிர்வாகம் விழித்தெழுந்ததாக பெற்றோர் குற்றம்சாட்டினர்.

நெருங்கிய போலீஸ்
ஏற்கனவே ஒரு அடையாள அணிவகுப்பு நடந்த நிலையில் மற்றொரு அடையாள அணிவகுப்பு நடத்தப்பட்டுள்ளது. சிறுமியை அதிகம் தொல்லை செய்து மன உளைச்சலுக்கு உள்ளாக்க கூடாது என்பதால் மென்மையாக விசாரித்து வருகிறோம் என்று துணை கமிஷனர் டி.பி.பவார் தெரிவித்தார். குற்றவாளிகளை நெருங்கிவிட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர். பெங்களூர் போலீஸ் உயர் அதிகாரிகள் குழு பள்ளியில் முகாமிட்டு பெற்றோருடன் பேச்சுவார்த்தை நடத்தியது.












Click it and Unblock the Notifications